கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது


  • கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 24-வது வார்டு விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சாலை சந்திப்பு எஸ் வளைவு போல் உள்ளது. இது கொடிசியா சாலை, விளாங்குறிச்சி சாலை, காந்திமா நகர் சாலை, தண்ணீர் பந்தல் சாலை ஆகிய 4 முக்கியச் சாலைகளை ஒன்றிணைக்கும் இடமாகும். இந்த சந்திப்பு பகுதியில் சாலை விரிவாக்க பணி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக நிலம் கையகப்படுத்த கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 24-வது வார்டு விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சாலை சந்திப்பு. இந்த சாலை என்பது கொடிசியா சாலை, விளாங்குறிச்சி சாலை, காந்திமா நகர் சாலை, தண்ணீர் பந்தல் சாலை ஆகிய 4 முக்கியச் சாலைகளை ஒன்றிணைக்கும் இடமாக உள்ளது. இதனால் எஸ் வளைவு போல் இருக்கும்.இங்கு எப்போதுமே வாகன போக்குவரத்து மிக அதிகமாக இருக்கிறது. மேலும் அங்கு அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாகவும் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் கோவையின் புறநகர் பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் நெரிசல் ஏற்படுவதால் விளாங்குறிச்சி சந்திப்பில் வரும் போது வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    Advertisement

    ஏனெனில் எஸ் வடிவ சாலையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இதனால் சாலையை விரிவுபடுத்துவதில் சிக்கலான நிலை நீடித்து வந்தது. அத்துடன் மற்ற சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் பிற சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. சாலை வளைந்து உள்ளதால் அடிக்கடி நெரிசல், விபத்து, வாகன ஓட்டிகளுக்கு தொல்லையாகவே இருந்து வந்தது. எனவே அந்த சாலை சந்திப்பை விரிவுபடுத்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் மற் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    Advertisement

    அதை ஏற்று ட கோவை மாநகராட்சி நிர்வாகம், அந்த பகுதியில் தற்போதுள்ள கட்டிடங்களை அகற்றிவிட்டு, இணைப்புச் சாலைகளை விரிவாக்கம் செய்யவும், அந்த சந்திப்பில் ஒரு சிறிய 'சுற்றுச்சாலையை' உருவாக்கவும் திட்டமிட்டிருக்கிறது. நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில், சந்திப்புக்கு உட்பட்ட சுமார் 39 சென்ட் நிலத்திற்கு 12 பேர் உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.

    அதன் முடிவில் நிலம் மற்றும் கட்டிடங்கள் ஆகிய இரண்டிற்கும் சேர்த்து ஒரு சதுர அடிக்கு ரூ.3,500 என்ற திருத்தப்பட்ட இழப்பீட்டு தொகையை வழங்க கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சந்திப்பு மேம்பாட்டு பணிகளுக்கான செலவு ரூ.6 கோடியே 55 லட்சம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்த மட்டும் ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் நிலையில், இதுவரை எந்தப் பணியும் தொடங்கப்படாமல் இருந்தது.

    Advertisement

    இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், நிலம் கையகப்படுத்த ஒரு சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்துள்ளார்.. அதோடு, நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி, கையகப்படுத்திய நிலத்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். எனவே விளாங்குறிச்சி சாலை சந்திப்பு அகலமாக வாய்ப்பு உள்ளது.

    English Summary

    The junction connecting Vilankurichi–Thaneerpandal junction Road in Ward 24 of the Coimbatore Corporation's East Zone features an 'S'-shaped curve. This location serves as the convergence point for four major roads: Codissia Road, Vilankurichi Road, Gandhima Nagar Road, and Thanneer Pandal Road. Road widening work is set to commence soon at this junction, and Coimbatore District Collector Pawan Kumar has ordered the acquisition of land for this purpose.