கோவில்களில் இனி முறைகேடு கூடாது.. விஜய் போட்ட உத்தரவு.. களமிறங்கிய ரமேஷ்.. என்ன நடக்கிறது?

  • கோயம்புத்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் முறைகேடுகளில் ஈடுபட்ட மூன்று பணியாளர்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடியாகப் பணிநீக்கம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களில் இனி முறைகேடு கூடாது..என்று அமைச்சர் ரமேஷுக்கு விஜய் போட்ட உத்தரவின் அடிப்படியில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன,

    Advertisement

    இதன் எதிரொலியாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து முக்கிய திருக்கோயில்களிலும் கடும் எச்சரிக்கை நிலவுகிறது. சென்னை தலைமையகத்திலிருந்து கோயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு வாய்மொழியாக மிகக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    கோயம்புத்தூர் மாவட்டம் தமிழகத்தின் முக்கிய ஆன்மீகச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்கு வரும் இங்குள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் பக்தர்களின் நம்பிக்கைக்குரிய இடங்களாகத் திகழ்கின்றன.

    மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காரமடை ரங்கநாதசுவாமி திருக்கோயில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில், மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், தடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோயில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில், பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் எப்போதும் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    Advertisement

    இந்தச் சூழலில், சாமி தரிசனத்தை எளிதாக்கித் தருவதாகக் கூறி பக்தர்களிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் (மிடில் மேன்) மற்றும் சில உள்ளூர் நபர்களின் செயல்பாடுகள் தொடர் புகார்களுக்கு வழிவகுத்தன. பொது தரிசன வழியை முடக்கிவிட்டு, பெருந்தொகை வசூலித்து பக்தர்களை ஏமாற்றும் இந்தச் சுரண்டல் முறை பல ஏழை, எளிய பக்தர்களை பாதித்து வந்தது. இத்தகைய முறைகேடுகளுக்கு தமிழக அரசு முழு முற்றுப்புள்ளி வைக்க உறுதியாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருச்செந்தூர் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்களின் செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். பக்தர்களிடம் கனிவான முறையில் நடந்துகொள்ள வேண்டும், தரிசனக் கட்டணத்துக்கு அப்பால் எந்தவித முறைகேடான பணப் பரிவர்த்தனையும் அனுமதிக்கக் கூடாது, இடைத்தரகர்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று கறாரான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    ஏதேனும் முறைகேடு அல்லது சுணக்கம் கண்டறியப்பட்டால் திருச்செந்தூரைப் போல உடனடி சஸ்பெண்ட் அல்லது பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்ட கோயில் வட்டாரங்களில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    மேலும், பக்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக்கிய கோயில்களான பேரூர் பட்டீஸ்வரர், மருதமலை சுப்பிரமணியசுவாமி மற்றும் காரமடை ரங்கநாதசுவாமி கோயில்களின் நுழைவாயில்கள் உள்ளிட்ட இடங்களில் பெரிய அளவிலான அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. "இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஏதேனும் புகார் இருந்தால் உடனடியாக கோயில் நிர்வாகத்திடம் தெரிவிக்கவும்" என்று இந்தப் பலகைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Advertisement

    அமைச்சர் ரமேஷின் இந்த அதிரடி நடவடிக்கைகள் தமிழகத்தின் அனைத்து திருக்கோயில்களிலும் சீரான நிர்வாகத்தையும், பக்தர்களின் நம்பிக்கையையும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காகவும், ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்தவும் அரசு எடுக்கும் இத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தக்கவை என்று பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

    English Summary

    Thiruchendur Temple Suspensions Trigger Major Crackdown in Coimbatore Temples