பெரிய லாபிகள்.. அப்ரோச் செய்ய முயன்று.. இப்போது அவதூறு ஏற்படுத்துகிறார்கள்! - அமைச்சர் விக்னேஷ்

  • கோயம்புத்தூர்: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றங்கள், பலரை பாதித்திருப்பதாகவும் இதனால் சிலர் தங்களை தொடர்பு கொள்ள முயற்சித்து.. இப்போது ஆட்சி குறித்து அவதூறு பேசுகிறார்கள் என்று அமைச்சர் விக்னேஷ் கூறியிருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த ஆட்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்திருக்கின்றன. அதை சரி செய்ய சில மாற்றங்கள் கிடையாது.. பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறோம். இந்த மாற்றங்கள் பலரை பாதித்திருக்கிறது.

    Advertisement

    ரூ.1,000 கோடிக்கு மேல் தொழில் செய்திருந்தவர்கள் தொடங்கி.. அடிமட்டத்தில் சில தொழிலாளர்கள் வரை இந்த மாற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, பெரிய பெரிய லாபிகள் எவ்வளவோ வழிகளில் எங்களை அப்ரோச் செய்ய முயற்சித்தார்கள். பணத்தை கொடுக்கிறோம்.. புதியதாக கொண்டு வந்திருக்கும் செட்டப்பை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். நாங்கள் எதற்கும் அசைந்துக்கொடுக்கவில்லை.

    இது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி, முதல்வர் விஜய்யின் கீழ் நிர்வாகம் நடைபெற்று வருகிறது. பணத்தால் இங்கு எந்த விஷயத்தையும் செய்ய முடியாது. பணத்தை வாங்கிக்கொண்டு இருக்கிற செட்டப்பை கைவிட முடியாது. அதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. மாற்றம் வேண்டும் என்றுதான் மக்கள் எங்களை தேர்வு செய்திருக்கிறார்கள். மாற்றத்தை கொடுக்கவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.

    Advertisement

    ஆனால், எங்களை அப்ரோச் செய்தவர்கள்.. எதுவும் செய்ய முடியவில்லை என்பதால், உடனே ஆட்சி மீது அவதூறு பரப்புகிறார்கள். மக்களுக்கு எல்லாம் தெரியும். அவதூறு பரப்புவர்களால் எதுவும் செய்ய முடியாது. மாற்றம் நடந்தே தீரும்.. டாஸ்மாக் மட்டுமல்லாது சுற்றுச்சூழல் துறையிலும் மாற்றம் நடக்கும். எனவே அவதூறுக்கும், ஆபாசத்திற்கும் பயப்படுவோம் என்று நினைக்காதீர்கள். அது தோல்விதான் தரும்.

    மது பாட்டில்களில் 'மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு' என எழுதப்பட்டிருப்பதை போல.. டாஸ்மாக் கடைகளின் பெயர் போர்டுகளிலும் விழிப்புணர்வு வாசகம் எழுதப்படும்" என்று பேசியிருக்கிறார்.

    ஆன்லைன் மது முன்பதிவு

    அமைச்சரின் பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம்.. தமிழக அரசு சமீபத்தில்தான் 'ஆன்லைன் மதுபான முன்பதிவு மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை' முறையை அமல்படுத்தியிருந்தது. இது, மது பழக்கத்தை மேலும் எளிமையானதாக மாற்றும் என்றும், மதுபான கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தமிழக அரசு ஏன் இப்படியான திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Minister Vignesh has stated that the changes implemented in the Prohibition and Excise Department have affected many people; consequently, some individuals who attempted to contact him are now speaking disparagingly about the government.