டாப்சிலிப், முதுமலை போக வேண்டாம்.. கோவையிலேயே யானைகளை பார்க்கலாம்.. சாடிவயல் யானைகள் முகாம் திறப்பு

  • கோவை: கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ள சாடிவயல் யானைகள் முகாம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர். வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    Advertisement

    கோவை மாவட்டம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதன் குளுகுளு காலநிலையும், பிரம்மிப்பை ஏற்படுத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையும் தான். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளையொட்டி உள்ள வனப்பகுதிகளில் யானைகள், மான்கள், புலிகள், சிறுத்தைகள் என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. பொதுவாக, கோவை மாவட்ட மக்கள் யானைகளைப் பார்க்க வேண்டும் என்றால் டாப்சிலிப், முதுமலை புலிகள் காப்பகத்திற்குத்தான் செல்வார்கள்.

    Advertisement

    சாடிவயல் யானைகள் முகாம்

    தற்போது, கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ள சாடிவயல் யானைகள் முகாம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முகாம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த பொதுமக்கள் யானைகளை நேரில் கண்டு மகிழ்ந்தனர். யானைகளுக்கு உணவு வழங்குவதையும், அவற்றின் செயல்பாடுகளையும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். யானைகளை அருகில் இருந்து பார்ப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உற்சாகமான அனுபவமாக அமைந்தது.

    முகாம் நேரம்

    வன உயிரினங்களின் முக்கியத்துவம், யானைகளின் வாழ்வியல் மற்றும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் செயல்பட உள்ளது. இந்த முகாமை பொதுமக்கள் தினமும் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையும், வனத்துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    வன உயிரினங்களை நேரில் கண்டு ரசிப்பதுடன், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்த்தும் இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

    English Summary

    Sadivayal Elephant Camp in Coimbatore has opened to the public, offering visitors an opportunity to see elephants up close and learn about wildlife conservation.