யார் கொடுத்த அதிகாரம்.. அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து மீட்டிங் நடத்திய கோவை தவெக எம்எல்ஏ

  • கோவை: தவெக ஆட்சியமைத்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. தவெகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, அரசு அதிகாரிகளைத் தனது வீட்டிற்கே வரவழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. களத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய வேண்டிய மக்கள் பிரதிநிதி வீட்டிற்கு அழைத்து ஆய்வு செய்யலாமா என தவெக உறுப்பினர்களே கனிமொழிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    கோவை மாவட்டத்தில் தவெக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கவுண்டம்பாளையம் தொகுதியில் கனிமொழி சந்தோஷ் என்பவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவர் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஜோதிடரான கனிமொழி, ஜோதிடம் மூலமாக புற்றுநோயை குணப்படத்தலாம் என்று சொல்லியது சர்ச்சையானது.

    Advertisement

    அடுத்தடுத்து சர்ச்சையில் தவெக எம்எல்ஏ

    தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவினர், எம்எல்ஏவாக பதவியேற்று அந்தந்த தொகுதிகளில் சென்று பணியாற்றி வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான எம்எல்ஏக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று தான் அதிகாரிகளிடம் ஆய்வு, ஆலோசனை நடத்துகிறார்கள்.

    இந்நிலையில் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி, அரசு அலுவலர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியது சர்ச்சையாகியுள்ளது. துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியின் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், கவுண்டம்பாளையம் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவர்களை சந்தித்து, தொகுதியில் பொதுச் சுகாதார சேவைகள் மேலும் மேம்படுத்தப்படுவது, தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    Advertisement

    அதிகாரிகளை வீட்டிற்கே அழைத்து

    மேலும், கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவது, நோய் தடுப்பு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவது மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுகாதார வசதிகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படுவது குறித்து விரிவாக கலந்துரையாடினேன். மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, தேவையான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்களுக்கு வலியுறுத்தினேன்" என்று கூறினார்.

    இதுகுறித்த புகைப்படங்களை சமூகவலைதளில் பதிவிட்டுள்ளார். அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. இதுகுறித்து திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், "அரசு மேல் அதிகாரிகளை தன் வீட்டுக்கு வர கட்டாயப்படுத்தி ஆய்வு செய்த அதிகாரத்தை இந்த சட்டமன்ற உறுப்பினருக்கு கொடுத்தது யார்" என்று முதலமைச்சர் மற்றும் கோவை ஆட்சியரை கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    தவெகவினரும் எதிர்ப்பு

    இதற்கு தவெகவினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கனிமொழியின் பதிவிலேயே தவெகவினர் எதிர்வினையாற்றி வருகிறார்கள். "மக்களின் குறைகளைக் கேட்கவும், வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிடவும் களத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த வேண்டிய மக்கள் பிரதிநிதி, அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தியது முறையல்ல. களத்திற்கு சென்று பணியாற்றாமல் வீட்டில் இருந்தபடி அதிகாரிகளை அழைத்து பேசுவது தவறான முன் உதாரணம்"என்று விமர்சித்துள்ளனர்.

    English Summary

    TVK Kanimozhi: Coimbatore Koundampalayam TVK MLA Kanimozhi locked in controversy after meeting with officials in her home. TVK members also opposed this.