விஜய் சேதுபதியே மன்னிப்பு கேள்.. பிக்பாஸ் தலைமை சர்ச்சை.. தவெக எம்எல்ஏ சுகுமார் மிரட்டல்

  • கோவை: விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கிடையே அவரை மிரட்டும் வகையில் சூலூர் தொகுதி எம்எல்ஏ சுகுமார் சில கருத்துகளை கூறியிருக்கிறார். விஜய் சேதுபதி தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் முற்றுகையிடுவோம் எனவும் பேசியுள்ளார்.

    Advertisement

    விஜய் டிவியில் மிகவும் ஹிட் அடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் இருக்கிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் இப்போது சீசன் 10ஐ தொட்டுள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கடந்த வாரம் எபிசோடில் தான் போட்டியாளர்களுடன் முதல்முறையாக கலந்துரையாடினார். அப்போது, இந்த சீசனின் முதல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷாதிகாவிடம் தலைமைத்துவம் குறித்து அவர் பேசியிருந்தார்.

    Advertisement

    என்ன நடந்தது!

    ஷாதிகாவின் தலைமைத்துவத்தை விமர்சிக்கும் வகையில் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துகள் தற்போது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளன. ஷாதிகாவிடம் விஜய் சேதுபதி பேசுகையில், "தலைவர் என்றால் என்னவென்றே தெரியாமல்.. தலைமைத்துவம் என்றால் என்னவென்றே புரியாமல்.. வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும், பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழி போட்டுவிட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது ஒரு தலைவருக்கான தரம் இல்லை. அது ஏமாற்று வேலை" என கூறியிருந்தார்.

    விஜய் டிவி

    பிக்பாஸ் போட்டியாளரின் தலைமைத்துவத்தை விமர்சிக்கும் நோக்கிலேயே விஜய் சேதுபதி இந்த கருத்தை தெரிவித்திருந்தாலும், அவரது பேச்சில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் தற்போது அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. விஜய் சேதுபதியின் இந்த பேச்சு, தமிழக முதலமைச்சர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இதில் விஜய் டிவி தரப்பில் இருந்து விளக்கம் வந்துவிட்டது. விஜய் சேதுபதி கருத்து யாரையும் குறிப்பிடும் வகையில் இல்லை என கூறியிருந்தனர். இருப்பினும், தவெகவினர் விடுவதாக இல்லை.

    Advertisement

    தவெக எம்எல்ஏ

    இந்நிலையில், விஜய் சேதுபதியின் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சூலூர் தொகுதி எம்எல்ஏ சுகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் விஜய் சேதுபதிக்கு முதலமைச்சரைப் பற்றி பேச எந்தவொரு தகுதியும் இல்லை என கூறியதுடன், விஜய் சேதுபதி தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் முற்றுகையிடுவோம் எனவும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

    இது தொடர்பாக தவெக எம்எல்ஏ சுகுமார் மேலும், கூறுகையில், "அவருக்கு மார்க்கெட் டவுன் ஆகிக்கொண்டு இருக்கிறது என நினைக்கிறேன். அதனால் தன்னோட விளம்பரத்துக்காக அந்த மாதிரி பேசுறாரு. அது மிக பெரிய தவறு. முதலமைச்சரை பேசுவதற்கு இவருக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

    Advertisement

    ஸ்டண்ட் அடிக்கிறார்

    தன்னோட ஷோவுக்கு ரீச் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படிப் பேசுகிறார். ஏன்னா, இப்ப யாரும் சீரியல் பார்ப்பதில்லை.. பிக்பாஸ் பார்ப்பதில்லை; காலையில் எழுந்தவுடன் சட்டமன்ற நிகழ்ச்சிகளை தான் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அந்த காரணத்தினால், விளம்பரத்துக்காகவும் பிக்பாஸை எல்லாரும் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் ஒரு ஸ்டண்ட் அடிக்கிறார். அவருக்கு இன்னும் அரசியல் என்னவென்று தெரியவில்லை.

    நாங்கள் சொல்வதை உலகம் பார்க்கிறது, தலைவரை விரும்புகிறார்கள். சென்ற இடத்தில் எல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. லண்டன் சென்றபோது அந்த கேலரி முழுக்கவே இந்தியாவை, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் இருந்தார்கள். அங்கு அவருக்கு வரவேற்பு எப்படி இருந்தது என்று பார்த்திருப்பீர்கள். தொழில் துறையிலும் ₹11,000 கோடி முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறார். அப்படிப்பட்ட முதலமைச்சரை பேச இவருக்கு எந்தத் தகுதியும் இல்லை.

    Advertisement

    மன்னிப்பு கேட்கணும்

    இது அவர் சொந்தக் கருத்தாக இருந்தாலும் சரி, டிவி சேனல் சொல்லி பேசியிருந்தாலும் சரி, அவர் தார்மீக அடிப்படையில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், அவர் எங்கு சென்றாலும் முற்றுகையிடுவோம். அவர் வளர்ந்து வரும் நடிகர்; தானாகவே வளர்ந்துவிட்டோம் என்று நினைக்கிறாரா அல்லது மார்க்கெட் டவுன் ஆனதால் பேசுகிறாரா என்று தெரியவில்லை.

    அவர் மன்னிப்பு கேட்டால் அவருக்கு நல்லது. அவருக்கு எதிராக போய் ஆர்ப்பாட்டம் பண்ணி, அவரை பெரிய ஆள் ஆக்க வேண்டிய அவசியமில்லை.. அவர் அவ்வளவு பெரிய ஆளும் கிடையாது" என்றார்.

    English Summary

    TVK MLA Sukumar has objected to Vijay Sethupathi comments on leadership during Bigg Boss Tamil 10(விஜய் சேதுபதி பிக்பாஸ் சர்ச்சை தவெக மிரட்டல்): Vijay Sethupathi Bigg Boss latest news in tamil.