கோவை:தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. முதல் ஆறு சுற்றுகள் வரை அதிமுகவே முன்னிலை வகித்து வந்தது. ஆரம்பம் முதலே பின்னடைவைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமா ஆறாவது சுற்றுக்கு பின் முன்னேற தொடங்கினார். அதன்பிறகு மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்து சுமார் 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா அபாரமாக வென்றுள்ளார். இதில் கோவிந்தபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் வாங்கிய வாக்குகளே சத்தியபாமா வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
தாராபுரத்தில் ஐந்து சுற்று வரை சுமார் 500 முதல் 1000 வாக்குகள் முன்னிலையில் அதிமுக இருந்து வந்தது. ஆனால் ஆறாவது மற்றும் ஏழாவது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலை வகிக்க தொடங்கினார். இந்தத் தலைகீழ் மாற்றத்திற்கு தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட 'கோவிந்தபுரம்' பகுதி வாக்கு எண்ணிக்கையே முதன்மையான காரணமாக முதலில் அமைந்துள்ளது. கடந்த மே 4 நிலவரத்துடன் ஒப்பிடும்போது, கோவிந்தபுரம் பகுதியில் தவெக வேட்பாளர் 1,752 வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது 3,036 வாக்குகள் பெற்றுள்ளதால், சுமார் 1,284 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளார். அதேவேளையில், கடந்த முறை அங்கு 3,393 வாக்குகள் பெற்றிருந்த அதிமுக, இம்முறை 1,490 வாக்குகளை மட்டுமே பெற்று 1,903 வாக்குகள் வரை பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. பொதுத்தேர்தலுடன் ஒப்பிடுகையில் தாராபுரத்தில் திமுக 2,473 வாக்குகளில் இருந்து 2,304 வாக்குகளாகச் சரிந்து 169 வாக்குகளை இழந்துள்ளது. நாம் தமிழர் கட்சி 224 வாக்குகளில் இருந்து 179 ஆகக் குறைந்து 45 வாக்குகளை இழக்க, சிபிஐ கட்சி புதிதாக 79 வாக்குகளைப் பெற்றுள்ளது. செல்வம்பாளையம், சீனாக்கம்பாளையம், சின்னக்கம்பாளையம், பெரியபுதூர் மற்றும் கோவிந்தபுரம் உள்பட பல்வேறு கிராமப் பகுதிகளில் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்குக் கிடைத்த இந்த கணிசமான வாக்கு உயர்வே, தாராபுரம் தேர்தல் களத்தில் அதிமுகவை முந்தி ஆளும் தவெக சுமார் 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல காரணமாக அமைந்தது. ஆரம்பத்தில் ஐந்து சுற்றுகளில் சவாலாக இருந்த அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துத் தோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற தவெக வேட்பாளரை ஒப்பிடுகையில், அதிமுக வேட்பாளர் 21,561 வாக்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா 5,268 வாக்குகளையும், சிபிஐ வேட்பாளர் லட்சுமணன் 1,157 வாக்குகளையும் பெற்றுத் தோல்வியடைந்தனர். தவெக வேட்பாளர் சத்யபாமா, வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தாராபுரம் தொகுதியைக் கைப்பற்றியுள்ளார். மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் விஜய் தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்தது, டீ குடித்தது, முருங்கைக்காய் பறித்தது, டிராக்டர் ஓட்டியது போன்றவை தவெகவிற்கு நல்ல பலனைத் தந்துள்ளன.