கோவை 'பெரியார் அறிவுலகம்' ஊழலை செய்தது யார்.. திமுகவா? தமிழக வெற்றிக்கழகமா? பாஜக சரமாரி கேள்வி

  • கோவை: கோவை 'பெரியார் அறிவுலகம்' குறித்த ஊழல் விவகாரத்தில், தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகத்திற்கு முந்தைய திமுக அரசு மற்றும் தற்போதைய த வெ க அரசு ஆகிய இரண்டு அரசுகளுமே பொறுப்பேற்க கடமைப்பட்டுள்ளன என்று பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

    Advertisement

    என்ன பிரச்சனை

    அண்மையில் தமிழக முதல்வர் விஜயால் திறந்து வைக்கப்பட்ட கோவையில் அமைந்துள்ள பெரியார் நூலகத்தில் புத்தகங்களை வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. வெறும் 300 ரூபாய் மதிப்பில் உள்ள புத்தகங்களை 1500 ரூபாய் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள் என்று எழுத்தாளர் பெருமாள் முருகன் பல முக்கியமான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். முந்தைய திமுக ஆட்சி காலத்தில் ஜனவரி மாதத்தில் புத்தகங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டது எனவே இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் போடப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்து வரும் தமிழக வெற்றிக்கழக அரசு ஏன் இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்யவில்லை என்று திமுக தரப்பு கேள்வி எழுகிறது உண்மையில் இதில் ஊழல் நடந்திருக்குமேயானால் அந்த ஊழலை செய்தது யார் திமுகவா? தமிழக வெற்றிக்கழகமா? என்று கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

    Advertisement

    பாஜக கேள்வி

    இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில் மேலும் கூறுகையில், "ஸ்டாலின் தலைமையிலான முந்தைய திமுக அரசு, 'பகுத்தறிவு மற்றும் அறிவின் அடையாளமாகக்' கருதப்படுவதாக சொல்லி, ஈ.வெ.ரா வின் பெயரில், சுமார் 300 கோடி ரூபாய் செலவில் ஒரு பொது நூலகத்தை உருவாக்குவதாக சொன்னது. அந்த நூலகத்திற்கு வழங்கப்பட்ட புத்தகங்களின் தரம், நம்பகத்தன்மை, ஆசிரியர் விவரம் மற்றும் அதன் உண்மையான மதிப்பு குறித்து தீவிர சந்தேகங்களுக்கு இடமளிக்கும் வகையில், ஒரு அறியப்படாத பதிப்பகத்திடமிருந்து சுமார் 1,800 புத்தகங்கள் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்டன (அல்லது வாங்க அனுமதிக்கப்பட்டன). இது ஏதோ ஒரு சிறிய நிர்வாகத் தவறு அல்ல. இது பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய பெரும் குற்றம் என்பதோடு, அந்த நூலகம் தொடங்கப்பட்ட நோக்கத்திற்கே பெரும் துரோகம் இழைத்த செயலாகும்.

    Advertisement

    கைகழுவ முயற்சிக்கக் கூடாது

    தற்போதைய அரசு, முந்தைய ஆட்சியின் மீது பழிபோட்டுவிட்டு, இந்த விவகாரத்தில் கைகழுவ முயற்சிக்கக் கூடாது. ஏறக்குறைய முழுமையடைந்த நிலையில் இந்த மையத்திற்கு பொறுப்பேற்று, மிகுந்த ஆரவாரத்துடன் பல கோடி ருபாய் செலவில் திறந்து வைத்த ஜோசப் விஜய் லைமையிலான தற்போதைய த வெ க அரசு, அங்குள்ள புத்தகங்கள், ஒப்பந்தங்கள் அல்லது சம்பந்தப்பட்ட பதிப்பகங்கள் குறித்து எந்தவிதமான தீவிர ஆய்வையும் மேற்கொள்ளவில்லை என்பது நிரூபணமாகிறது.

    மயிலாப்பூர் வீட்டு 'டிரங்க்' பெட்டியில் நிறைய தங்கம்.. 20 ஆண்டுகள் வேலை செய்த மணிமேகமலைக்கு சபலம்
    Advertisement

    சமாளிப்பு நடவடிக்கை

    ஒரு சில முக்கிய எழுத்தாளர்கள் இந்த முறைகேட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பிறகுதான் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாலும், இது பொறுப்பான நிர்வாகதிற்கு அழகல்ல. மாறாக, ஊழலை மறைக்கும், பிரச்சினையைச் கடந்து செல்ல எடுக்கப்பட்டிருக்கும் ஒரு தற்காலிக சமாளிப்பு நடவடிக்கையே ஆகும். ஒரு ஊழல் அல்லது முறைகேடு பெரும் சர்ச்சையாகி, தங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சூழல் வரும் வரை காத்திருந்துவிட்டு, அதன் பிறகு நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்வது முறையயற்ற, நேர்மையற்ற நிர்வாகமே.

    இரு தரப்புமே தவறிவிட்டன

    பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு அறிவு மையம், நேர்மை மற்றும் தரத்திற்கான அடிப்படைகளை கொண்டிருக்க வேண்டும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அன்றைய திமுக அரசும், அதைத் திறந்து வைத்து தற்போது நிர்வகிக்கும் த வெ க அரசும் நடைபெற்ற முறைகேட்டுக்கு பொறுப்பேற்பதில் அரசியல் செய்வதினால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்து செயல்படுவதில் இரு தரப்புமே தவறிவிட்டன.

    Advertisement
    கோவை பெரியார் அறிவுலகத்தில் முறைகேடு எப்படி நடந்திருக்கும்? எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் விளக்கம்

    யார் யாருக்கு பங்கு

    புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விதம், செலவிடப்பட்ட நிதி, இரு ஆட்சிக் காலங்களிலும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் பங்கு, மற்றும் வாங்கப்பட்ட புத்தகங்களின் உண்மையான தரம் குறித்து முழுமையான, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், முறைகேடுகள் நிகழ்ந்த பொது நிதியை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படியில்லையெனில், இந்தத் திட்டம் அறிவு சார்ந்த அல்லது பொது நலன் சார்ந்த திட்டம் அல்ல, மாறாக அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்து விட்டு பின்னர் சாக்குப்போக்குகளை சொல்லி தப்பித்துக்கொள்ள மட்டுமே செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும்" இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

    English Summary

    Who is responsible for the corruption at the 'Periyar Arivulagam' in Coimbatore—the DMK or the Tamizhaga Vettri Kazhagam? The BJP poses a barrage of questions.