கோயம்புத்தூர்: காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்த வைக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "திறந்து வைப்பதில் என்ன பெருமை? உருவாக்குவதில்தான் பெருமை" என்று கூறியிருக்கிறார்.
கோவை காந்திபுரத்தில் சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இதன் கட்டுமான பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்திருக்கின்றன.
இந்த நூலக திறப்பு விழாவில் பங்கேற்க கோவை விமான நிலையத்திற்கு இன்று காலை 11 மணியளவில் வரும் விஜய், அங்கிருந்து 11.45 மணியளவில் காந்திபுரம் பெரியார் அறிவுலகத்துக்கு சாலை வழியாக வருகை தந்து கல்வெட்டை திறந்து வைக்கிறார். தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று.. புதிய வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மொத்தம் 1.98 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 8 தளங்களை கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகம், A-B என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ நூலகம் 350 பேர் அமரக்கூடிய அதிநவீன அரசங்கம் மற்றும் அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த மையத்தை திறந்து வைப்பது குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் மு.க.ஸ்டாலின், "பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ வழி தடத்தை தொடர்ந்து நமது திமுக அரசின் மற்றொரு மாபெரும் திட்டம் இன்று மக்கள் பயன்பாட்டுக்கு அர்பணிக்கப்பட உள்ளது. சுயமரியாதையையும், பகுத்தறிவையும் பரப்புவதே தம் வாழ்நாள் கடமையாக கொண்டு தமிழ் இனத்தின் மேன்மைக்காக இறுதி மூச்சு வரை உழைத்து ஒளி வீசிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பெயரிலான அறிவுலகம் இன்று திறக்கப்படுகிறது. மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது. 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இளைய தலைமுறையினரின் அறிவு தாக்கத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்தோம். அதை அடுத்து 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி அடிக்கல் நாட்டி, கோவை மத்திய சிறைச்சாலைக்கு சொந்தமான இடத்தில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் கூடிய சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் இதனை கட்டி முடித்தோம். இப்படி நாம் விரைந்து செயல்பட்டு அக்கறையோடு உருவாக்கிய அறிவு கோயில்தான் பெரியார் அறிவுலகம். தரைத்தளத்தில் கலையரங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் விண்வெளி பயணத் தூக்கி, முதல் தலத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்த புத்தகம் படிக்கும் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டி தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ் புத்தகப் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, ஐந்து ஆறாவது தளங்களில் ஆங்கில புத்தக பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர். ஏழாம் தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம்.. என காண்போரின் கண்களை கவரும் விதத்தில், சிந்தையை தூண்டும் விதத்திலும் உலக தரத்தில் இதனை அமைத்துள்ளோம். 1.25 லட்சம் நூல்களை கொண்ட மேற்கு மண்டலத்துக்கான மாபெரும் அறிவு சுரங்கமாக இது திகழ உள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் கோவைக்கு சென்ற போது, பெரும்பாலான பணிகள் முடிவுற்றிருந்தன. அப்போதே இதை திறந்து வைத்திருக்கலாம் என பலரும் சொன்னபோது.. அவசரம் வேண்டாம், முழுமையாக பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது! என சொன்னேன். யாரு திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவது தானே உண்மையான பெருமை? தமிழ்நாட்டில் அந்த பெருமை ஆக்க சக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது. பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பிரம்மாண்டமான அழகிய நூலகத்தை கலைஞர் கருணாநிதி உருவாக்கினார். கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்திற்கு பின்னர் அதனை அங்கிருந்து மாற்றி விடவும், சீரழித்து விடவும் பலர் முயற்சி மேற்கொண்டனர். அனைத்தையும் தடுத்து நிறுத்தி.. திமுக அரசு 2021 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததும்.. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு புத்துயிர் ஊட்டினோம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு சரணாலயமாக இன்றளவும் அது திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்ல, ஆட்சியில் இல்லாத நிலையிலும்.. திராவிட மாடல்ல அரசின் சாதனைகள் ஒவ்வொரு நாளும் மிளிர்கின்றன. திராவிட முன்னேற்றக் கழக அரசைத் தவிர வேறு எந்த அரசும், இப்படி நூலகங்களை அமைத்ததில்லை என்று கழக உடன்பிறப்புகள் தம் காலரை தூக்கிவிட்டு பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எழுந்திருக்கும் இந்த அறிவு சின்னங்கள்.. கழக அரசின் சிந்தனையில் உதித்தவை! கழகத்தால் எழுப்பப்பட்டவை! வேறு எந்த அரசும் செய்யாதவை. பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்பங்கள், பிரமிடு வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்து வைத்துள்ளார்களாம். தான் முதல்வராக ஆகிவிட்ட பின்பும் கூட முதல்வன் என்ற சொல்லை கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவு தான் வரும் என நம் எதிரிகள் அஞ்சுகிறார்கள் என்றால்.. அதுதான் நமது வெற்றி! நமது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி!" என்று கூறியிருக்கிறார்.