கோவை: கோவை சிறைக்குள் அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர், போலீசாரின் கண் முன்னாடியே எகிறி தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.. அவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், இதில் ஹைலைட் என்னவென்றால், இப்போது தப்பி ஓடிய கைதி, ஏற்கனவே பலமுறை போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியவராம்.. இந்த முறை தப்பிக்க என்ன செய்தார் தெரியுமா?
கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து 2வது முறையாக தப்பிச் சென்ற கைதி ராகவன் (25), போலீசாரின் 3 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு சத்தியமங்கலம் பகுதியில் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த இவர் மீது தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளாவில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஏற்கனவே போலீசாரிடம் இருந்து பலமுறை தப்பிய இவர், இந்த முறையும் சிறை வளாகத்திலேயே தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகவன் மீது கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. இதுதொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூன் மாதம் கோவை மத்திய சிறையில் இருந்து கர்நாடக போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். விசாரணை முடிந்து கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பச்சாக்கவுண்டனூர் பகுதியில் போலீசாரை ஏமாற்றிவிட்டு ராகவன் தப்பி சென்றார். இதையடுத்து கர்நாடக போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் அன்னூர் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் பவானிசாகர் பகுதியில் பதுங்கியிருந்த ராகவனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பிறகு அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக கடந்த அக்.30ம் தேதி நள்ளிரவு அவரை அழைத்து வந்தனர். அப்போது கோவை மத்திய சிறை வளாகத்தின், முதல் நுழைவு வாயிலை கடந்தவுடன் ராகவனுக்கு போடப்பட்டிருந்த கைவிலங்கை போலீசார் அகற்றியிருக்கிறார்கள்.. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ராகவன், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரை ஏமாற்றிவிட்டு மீண்டும் தப்பி ஓடினார். உடனடியாக போலீசார் அவரை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. ஜெயில் வளாகத்தில் இருந்து தப்பிய ராகவன், அங்கிருந்து எப்படி சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், அந்த அந்த வழியாக வந்த ஒரு லாரியில் ராகவன் ஏறி சென்றது தெரியவந்தது. பிறகு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே லாரியிலிருந்து இறங்கிய ராகவன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைக்கை திருடி சென்றுள்ளார். இதையடுத்து பைக் திருட்டு தொடர்பாகவும் ராகவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் ராகவனை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ராகவனை பிடிக்க மாநகர மற்றும் மாவட்ட போலீசார் அடங்கிய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ட்ரோன் கண்காணிப்பு, சிசிடிவி கேமரா காட்சிகள், வாகன சோதனை என பல்வேறு வழிகளில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், ராகவனை பற்றின தகவல்கள் எல்லாம் இப்போதுதான் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ராகவன் இலங்கை அகதி என்பதும், அவருடைய குடும்பத்தினர் பவானி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருவதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படையினர், அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போதுதான், கர்நாடக போலீசாரிடமிருந்தும், அன்னூர் போலீசாரிடமிருந்தும் தப்புவதற்கு முன்பு, ஏற்கனவே கேரளாவிலும் இப்படித்தான் ராகவன் தப்பி ஓடியது தெரியவந்தது. அங்கு கேரள போலீசார் கைது செய்து ஜெயிலுக்கு அழைத்துச் சென்றபோதே, ராகவன் தப்பி ஓடினாராம். அதாவது மொத்தம் 3 முறை போலீசாருடன் இருக்கும்போதே ராகவன் தப்பியிருக்கிறார். கோவையில் தப்பி ஓடியது 3வது முறையாகும்.. இதையடுதத்து தொடர்ந்து 3 நாட்களாக ராகவனை தேடி வந்த தனிப்படை போலீசார், நேற்றிரவு சத்தியமங்கலம் பகுதியில் அவரை கைது செய்தனர். ஏற்கனவே பலமுறை போலீசாரிடம் இருந்து தப்பியவர் என்பதால், கூடுதல் போலீசார் பாதுகாப்புடன் அவரை அன்னூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த கைதி ராகவனால் 4 போலீஸ்காரர்களுக்கு இப்போது சிக்கல் வந்துள்ளது.. கைதி ராகவன் தப்பிச் சென்ற சம்பவத்தில் பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக அன்னூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அப்துல் முத்தலிப், தலைமை காவலர் ரஞ்சித் மற்றும் ஆயுதப்படையை சேர்ந்த 2 காவலர்கள் என மொத்தம் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்..,!!ஜூன் மாதம் தப்பிய கைதி
மீண்டும் சிறையில் இருந்து எஸ்கேப்
லாரியில் ஏறி எஸ்கேப்
குடும்பத்தினரிடம் விசாரணை
சத்தியமங்கலத்தில் கைது