அடுத்த ஜி.டி. நாயுடு யார்? வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ₹10 லட்சம் பரிசு.. நம்பி நாராயணன் நெகிழ்ச்சி

  • கோவை: மறைந்த இந்திய தொழிலதிபர் கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் குடும்பத்தினருடன் இணைந்து, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் நடத்திய "அடுத்த ஜி.டி. நாயுடு யார்?" கண்டுபிடிப்பு போட்டி கோவையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரவிருக்கும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஐந்து வெற்றியாளர்களுக்கான பரிசு தரப்பட்டது.

    Advertisement

    இத்திரைப்படத்தின் விளம்பரம் மற்றும் சமூக விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இப்போட்டிக்கு, தமிழ்நாட்டின் பொறியியல் மாணவர்களிடம் இருந்து வியக்கத்தக்க ரெஸ்பான்ஸ் கிடைத்தது. மாநிலம் முழுவதிலும் உள்ள 165 பொறியியல் கல்லூரிகளில் இருந்து 780 திட்டங்கள் வந்திருந்தன. தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு நடத்திய டிஜிட்டல் பரிசீலனைச் சுற்றுக்குப் பிறகு, சிறந்த 36 டீம்கள் ஜூலை 2ம் தேதி வியாழக்கிழமை அன்று கோவையில் நடைபெற்ற நேரடி அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

    Advertisement

    அரையிறுதி

    அரையிறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 டீம்களும் தங்களின் கண்டுபிடிப்புத் திட்டங்களை முன்வைத்து, தங்களின் மாடல்களை (Working prototypes) செயல்விளக்கம் செய்து காட்டினர். மேலும், வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தின் நாராயணன், கோவை STEM லேப்ஸ் தலைவர் ராமராஜ் மற்றும் பிரிகால் (Pricol) முன்னாள் தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

    இக்குழுக்கள் ஒன்பது விரிவான அளவுகோல்களைக் கொண்ட மதிப்பெண் முறையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டன. இதில் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனை மற்றும் அதன் நிஜ உலக தொடர்பு, செலவு, புதுமை, சமூகத் தாக்கம், தொழில்நுட்பத்தின் ஆழம், நேரடி செயல்விளக்கம், நடுவர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தரம், மற்றும் முக்கியமாக மேடையில் அவர்கள் கொண்டு வந்த பணிக்கு ஒவ்வொரு குழுவும் காட்டிய அர்ப்பணிப்பு ஆகியவை அளவிடப்பட்டன. அன்றைய தினத்தின் முடிவில், பன்னிரண்டு குழுக்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

    Advertisement

    இறுதிச் சுற்று

    ஜூலை 3, வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில், புகழ்பெற்ற முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும் பத்ம பூஷன் விருது பெற்றவருமான டாக்டர் நம்பி நாராயணன் மூத்த நடுவர் குழுவின் உறுப்பினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். டாக்டர் நம்பி நாராயணனின் பங்கேற்பு இறுதிப் போட்டியாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. செயல்விளக்கம் மற்றும் கேள்வி-பதில் பகுதியின் போது அவருடன் நேருக்கு நேர் உரையாடும் அரிய வாய்ப்பு கிடைத்தாக பல மாணவர்கள் விவரித்தனர்.

    இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய 12 குழுக்களும் தங்களின் திட்டங்களை முன்வைத்து, நேரடி செயல்விளக்கங்களைச் செய்து காட்டி, நடுவர் குழுவின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். இரண்டாம் நாளின் அளவுகோல்கள் முதல் நாளை விட மிகவும் ஆழமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இத்திட்டங்களின் தொழில்நுட்ப நுணுக்கம், வணிக மாதிரி மற்றும் சந்தை நம்பகத்தன்மை, பெரிய அளவில் உற்பத்தி செய்வது ஆகியவற்றுக்கு மார்க் தரப்பட்டது.. நடுவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், முதல் ஐந்து இடங்களைப் பிடித்த குழுக்கள் இறுதி செய்யப்பட்டு போட்டியின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன.

    Advertisement

    வெற்றியாளர்கள்

    போட்டியின் வடிவமைப்புக்கு ஏற்ப, முதல் ஐந்து இடங்களைப் பிடித்த குழுக்களின் இறுதி ரேங்க் சனிக்கிழமை மாலை கோவையில் நடைபெற்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. டாக்டர் நம்பி நாராயணன், மறைந்த ஜி.டி. நாயுடுவின் மகன் கோபால், வரவிருக்கும் திரைப்படத்தில் ஜி.டி. நாயுடுவாக நடிக்கும் நடிகர் ஆர். மாதவன், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் வர்கீஸ் மூலன், மற்றும் மூத்த கலைஞர்கள், முக்கியப் பிரமுகர்கள், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் முன்னிலையில் வெற்றியாளர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டது.

    முதல் பரிசு - ₹5,00,000

    எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி, ஈரோடு - பார்கின்சன் (Parkinson's) நோயுடன் வாழும் நோயாளிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட "பார்கின்ஸ்கிரைப்" (ParkinScribe) திட்டத்திற்காக இப்பரிசைப் பெற்றது.

    Advertisement

    இரண்டாம் பரிசு - ₹3,00,000

    ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, சென்னை - ஆட்டிசம் (Autism) குறைபாட்டைக் கொண்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட கல்வி தொழில்நுட்பக் கண்டுபிடிப்பான EDU4AUTISM திட்டத்திற்காக இப்பரிசு தரப்பட்டது.

    மூன்றாம் பரிசு - ₹1,25,000

    ஜே.கே.கே முனிராஜா தொழில்நுட்பக் கல்லூரி - சிறு விவசாயிகளை நோக்கமாகக் கொண்டு, குறைந்த செலவில் நீடித்த உணவுப் பாதுகாப்புத் தொழில்நுட்பமான PCM (Phase Change Material)-ஐப் பயன்படுத்தும் சூரியசக்தி உலர்த்தி திட்டத்திற்காக இப்பரிசு வழங்கப்பட்டது.

    நான்காம் பரிசு - ₹50,000

    சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - இந்திய வீடுகளுக்கான உள்நாட்டுப் பாதுகாப்பு கண்டுபிடிப்பான ஸ்மார்ட் எல்பிஜி மானிட்டர் (Smart LPG Monitor) திட்டம் 4ம் பரிசை தட்டி சென்றது.

    Advertisement


    ஐந்தாம் பரிசு - ₹25,000

    வேலூர் தொழில்நுட்ப நிறுவனம், வேலூர் - அவசர கால சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட பாதுகாப்பு கருவியான 'சைலண்ட் எஸ்ஓஎஸ்' (Silent SOS) திட்டத்திற்காக இந்த பரிசு தரப்பட்டது.

    இந்த போட்டியில் தரப்பட்ட மொத்த ரொக்கப் பரிசுத் தொகையான ₹10 லட்சத்தை படத்தின் தயாரிப்பாளர்கள் வழங்கினர்.

    தன் வகையில் முதல் முயற்சி

    இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றும், அத்திரைப்படத்தின் கதைக் கதாநாயகனின் குடும்பத்தாரும் (ஜி.டி. நாயுடு குடும்பம்) இணைந்து, திரைப்பட விளம்பர முயற்சியின் ஒரு பகுதியாகப் பொறியியல் மாணவர்களுக்காக மாநில அளவிலான இத்தகைய பெரிய அளவிலான கண்டுபிடிப்புப் போட்டியை நடத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

    விளம்பரத்தை தாண்டி, இப்போட்டி ஒரு தெளிவான சமூக நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது.. தமிழ்நாட்டின் புதிய தலைமுறை பொறியியல் மாணவர்களுக்கு இந்தியாவின் மிக சிறந்த உள்நாட்டுக் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை, பணி மற்றும் மதிப்புகளை அறிமுகப்படுத்துவதும், அவரது சிக்கனமான பொறியியல் உணர்வு இம்மாநிலத்தின் வகுப்பறைகளில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதைக் காட்டுவதும் இதன் நோக்கமாகும்.

    பிரமிப்பு

    இது தொடர்பாக வர்கீஸ் மூலன் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் வர்கீஸ் மூலன், "தமிழ்நாட்டின் வகுப்பறைகளில் அடுத்த தலைமுறை ஜி.டி. நாயுடுக்களை கண்டறிவதே இந்தப் போட்டியின் நோக்கமாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களில் நாங்கள் 70 திட்டங்களைப் பார்த்து, அதில் 12 திட்டங்களை இறுதி செய்தோம். அந்தத் தலைமுறை ஏற்கனவே உருவாகிவிட்டது தெளிவாகிறது. அவர்களை கவுரவிப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்" என்றார்.

    ஜிடி நாயுடு படத்தில் நடித்துள்ள மாதவன் கூறுகையில், "கடந்த இரண்டு நாட்களில் நாம் பார்த்த ஒவ்வொரு திட்டமும், ஏதோ ஒரு வகையில் உண்மையான இந்தியப் பிரச்சனைக்கான சிறிய தீர்வாகும். ஜி.டி. நாயுடு வாழ்க்கை முழுக்க இத்தகைய பிரச்சனைகளுக்கு ஒவ்வொன்றாக பதில் கொடுத்து வந்தார். அவரது பெயரில் 780 இளம் பொறியியல் குழுக்கள் அதையே செய்வதைப் பார்ப்பது பெருமைக்குரிய விஷயம்" என்றார்.

    ஜிடி நாயுடுவின் மகன் கோபால் கூறுகையில், "என் தந்தைக்கு இது மிகவும் பிடித்திருக்கும். அவர் தனக்கு ஒரு சிலை வைக்கப்படுவதை ஒருபோதும் விரும்பவில்லை. அவர் அதிக பொறியியலாளர்களை விரும்பினார். அதைத்தான் இந்தப் போட்டி உருவாக்கியுள்ளது.. குடும்பத்தின் சார்பில், இதைச் சாத்தியமாக்கிய ஒவ்வொரு கல்லூரிக்கும், ஒவ்வொரு மாணவருக்கும், ஒவ்வொரு நடுவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    இது தொடர்பாக டாக்டர் நம்பி நாராயணன் கூறுகையில், "என் வாழ்க்கையில் நான் பல போட்டிகளுக்கு நடுவராக இருந்திருக்கிறேன். இந்த வாரம் கோவையில் நான் பார்த்தவை, நான் வளர்ந்த காலத்து இளம் பொறியாளர்களை எனக்கு நினைவூட்டியது. எதற்கும் அஞ்சாத, சுய கற்றல் கொண்ட, பொதுவெளியில் தோற்கப் பயப்படாத பொறியாளர்களை பார்த்தேன். மக்களுக்காகப் பிரச்சனைகளை தீர்க்க முயலும் பொறியாளர்களைக் கண்டேன். தமிழ்நாடு இதைக் குறித்துப் பெருமைப்பட வேண்டும்" என்றார்.

    "அடுத்த ஜி.டி. நாயுடு யார்?" என்ற இந்த போட்டி, "இந்தியாவின் எடிசன்" என்றும் "கோவையின் செல்வத்தை உருவாக்கியவர்" என்றும் பிரபலமாகக் கொண்டாடப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் (1893-1974) வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு உருவாகியுள்ள திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களால் ஜி.டி. நாயுடு குடும்பத்தினருடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில், ஆர். மாதவன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

    ஜிடி நாயுடு

    கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில், ஆர். மாதவன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன் மற்றும் ட்ரைகலர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர். மாதவன் மற்றும் சரிதா மாதவன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், கருணாகரன் மற்றும் முரளிதரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    தேசிய விருது வென்ற 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்துறை பாரம்பரியத்தில் வேரூன்றிய இந்த கதைக்காக மீண்டும் இணைந்துள்ளன. இத்திரைப்படம் ஜூலை மாத திரையரங்கு வெளியீட்டிற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

    English Summary

    Organized by Varghese Moolan Pictures and Tricolour Films, the statewide Who is the Next GD Naidu? contest(அடுத்த ஜிடி நாயுடு யார் என்ற போட்டியில் ட்விஸ்ட்): Next GD Naidu contest latest news in tamil.