கோவை கருமத்தம்பட்டிக்கு போன மின் வாரிய அதிகாரிகள்.. ஆடிப்போக வைத்த காட்சி

  • கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே விவசாயத்திற்கு மின் இணைப்பு பெற்று வணிக ரீதியாக பயன்படுத்தியவருக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதித்திருக்கிறார்கள் அதிகாரிகள். கோவை தெற்கு, உடுமலை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 13 பேர் மின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் அவர்களுக்கு ரூ.17 லட்சத்து 27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Advertisement

    கோவை மாநகரை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்கள் 20, 25 வருடங்களுக்கு முன்பே வணிகப்பகுதியாக முழுமையாக மாறிவிட்டன. ஆங்காங்கே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு தான் விவசாயம் நடைபெறுகிறது. குறிப்பாக அவிநாசி ரோட்டில் இருக்கும் கருமத்தம்பட்டி, செலக்கரிச்சல், சோமனூர் போன்ற பகுதிகள் எல்லாமே விசைத்தறி கூடங்கள், பருத்தி ஆலைகள் மற்றும் இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் நிறைந்த வணிகப்பகுதிகள் ஆகும்.

    Advertisement

    இங்கிருந்து விவசாய நிலங்கள் எல்லாம் எப்போதோ தொழிற்சாலைகளாகவும், ரியல் எஸ்டேட் மனைகளாகவும் மாறிவிட்டன. அதேநேரம் ஒரு சில பகுதிகளில் இன்றும் விவசாயம் உள்ளது. அந்த விவசாய நிலங்களின் அருகில் வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளன. அப்படி அமைந்துள்ள இடங்களில் ஒரு சிலர் விவசாய மின் இணைப்பை தவறாக வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுபற்றி கோவை மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மின் திருட்டு குறித்து கோவையில் கூட்டு ஆய்வு நடத்தினர். இதில் கருமத்தம்பட்டி அருகே செலக்கரிச்சல் பகுதியில் தணிக்கை செய்யப்பட்டதில் ஒருவர் விவசாய பயன்பாட்டிற்காக மின் இணைப்பு பெற்று, அதனை வணிக ரீதியாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவருக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதித்தனர்.

    Advertisement

    இது குறித்து கோவை மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், கருமத்தம்பட்டி மின் திருட்டு தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டதில் விவசாய பயன்பாட்டிற்கு பெறப்பட்ட மின் இணைப்பை வணிகத்திற்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ரூ.5 லட்சத்து 94 ஆயிரத்து 658 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சமரச தொகையாக ரூ.32 ஆயிரம் செலுத்தினார். இதன் காரணமாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை.

    இதுதவிர கோவை தெற்கு, உடுமலை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 13 பேர் மின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் அவர்களுக்கு ரூ.17 லட்சத்து 27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர விதிமீறலில் ஈடுபட்ட 8 மின் நுகர்வோர்களுக்கு ரூ.9 லட்சத்து 43 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நபர்கள் சமரசத் தொகையாக ரூ.85 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது போலீசில் எதுவும் புகார் அளிக்கப்படவில்லை. கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் திருட்டு, விதிமீறல்கள் குறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்" இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    English Summary

    A fine of ₹6 lakh has been imposed on an individual near Karumathampatti, Coimbatore, for using an agricultural electricity connection for commercial purposes.