கோவை: முதல்வர் விஜய் கரூர் செல்வதைக் கண்டு திமுகவினர் தேவையற்ற அச்சம் அடைகின்றனர். விசாரணை சம்மனுக்கு ஆஜராகாமல் ஓடி ஒளிபவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொள்வதைப் போன்றது என்று சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது: ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும், எந்த இடத்திற்கும் செல்வதற்கு 100 சதவீதம் உரிமை உண்டு. ஆனால், முதல்வர் விஜய் கரூருக்கு செல்வதைக் கண்டு திமுகவினர் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்பது புரியவில்லை. முதலமைச்சர் சென்றால் அங்குள்ள மக்கள் என்னென்ன உண்மைகளைச் சொல்லி விடுவார்களோ என்ற அச்சமே இதற்கு காரணம்.
இதனைத் தடுப்பதற்காக எந்த அடிப்படை விவரமும் இல்லாமல் திமுகவின் சட்டக் குழு உச்சநீதிமன்றம் வரை சென்று மனுத்தாக்கல் செய்து அனைவரின் நேரத்தையும் வீணடிக்கிறது. வழக்கை முழுமையாகப் படித்துவிட்டு வாருங்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே திமுக தரப்புக்கு அறிவுறுத்தும் அளவுக்கு அவர்களின் மனுக்கள் இருந்தது. கடந்த பல ஆண்டுகளாக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் துரோகம் செய்தவர்கள் தற்போது முதலமைச்சரின் பயணத்தைக் கண்டு அஞ்சி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பினர் மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் காவல் துறையினரின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது குறித்த கேள்விக்கு, சம்மன் அளிக்கப்பட்டால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது. குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் மட்டுமே அவர்கள் சம்மனுக்கு ஆஜராகாமல் ஓடி ஒளிகின்றனர். கடந்த காலங்களில் தங்களுக்கு டெல்லியில் சிபிஐ சம்மன் அனுப்பியபோது தாங்கள் நேரில் சென்று ஆஜராகி விளக்கம் அளித்தோம். செந்தில் பாலாஜி தன்னை சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக நினைத்துக் கொள்ளக் கூடாது. காவல் துறை தனது கடமையைச் சரியாகச் செய்து வருகிறது. தற்போது மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை. பல மாநிலங்களை விடத் தமிழகத்தின் மின்சாரத் துறை அதிக கடனில் உள்ளது. அத்துறையை முழுமையாக சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், சுமார் 15 ஆயிரம் பேர் ஆறு மாத காலத்திற்கு தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பெற்று, பின்னணி சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த தற்காலிகப் பணி நியமனங்கள் நூறு சதவீதம் நேர்மையான முறையில் நடைபெற்று வருகின்றன. எந்தவொரு சிபாரிசுக் கடிதத்தின் அடிப்படையிலும் யாருக்கும் பணி வழங்கப்படவில்லை. தகுதியின் அடிப்படையில் மட்டுமே வெளிப்படைத் தன்மையுடன் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று கூறினார்.