அரை நிர்வாணம், முகம் சிதைந்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கோவையில் பரபரப்பு!

  • கோவை: கோவைபுதூர் மேற்கு புறவழிச்சாலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகேயுள்ள ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் இளம்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், கோவையில் இளம்பெண் ஒருவரின் சடலம் மர்மமான முறையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம் மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    கோவை மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர் மேற்கு புறவழிச் சாலை பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கல்லூரிக்கு அருகே உள்ள ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான நிலையில் சடலம் கிடப்பதை கண்டு குனியமுத்தூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் அழுகிய நிலையிலும், அரை நிர்வாண நிலையிலும் இருந்த சடலத்தை மீட்டனர்.

    Advertisement

    சடலத்தின் முகம் கடுமையாக சிதைந்திருந்ததால், உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. இதனால் அவர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இளம்பெண்ணின் மரணத்திற்கான காரணம் மற்றும் வேறு ஏதேனும் குற்றச்சம்பவ பின்னணி உள்ளதா என்பது குறித்து மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகே உறுதியான தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English Summary

    Police have launched an investigation after the body of an unidentified young woman was found in a secluded area near Coimbatore western ring road.