கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது

  • கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று இரவு நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகம் அருகே இந்த தாக்குதல் நடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஒரு இட்லி கடையில் வழக்கம்போல் பொதுமக்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் சில இளைஞர்கள் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த தகராறு சில நிமிடங்களில் கடுமையான மோதலாக மாறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த மோதலின் போது விஷ்வேஷ் என்ற இளைஞர் மீது கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவரது வலது கை மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    தாக்குதல் நடத்திவிட்டு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், தகவல் கிடைத்தவுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து கோவை ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும், இந்த தாக்குதலுக்கு பின்னால் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா? முன்விரோதம் காரணமா? அல்லது மது போதையில் ஏற்பட்ட தகராறா? என்பது உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற மக்கள் அதிகம் கூடும் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இப்படியான வன்முறை சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

    English Summary

    A youth named Vishvesh was allegedly stabbed during a drunken clash near the Coimbatore Collector Office on Sunday night. He suffered injuries to his right hand and leg and is currently receiving treatment at the government hospital. Police arrested four persons from Thanjavur district who were hiding near the railway station and launched a detailed investigation into the incident.