பட்ட பகலில் கத்தியை காட்டி பிரச்சனை செய்த இளைஞர்.. பரபரப்பான கோவை ஈஷா யோகா மையம்

  • கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். திமுக ஆட்சியில் இருந்தே சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்தும் அது சரியாகவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில் ஈஷா யோகா மையத்தில் பட்டப்பகலில் ஒரு இளைஞர் கத்தியுடன் வந்து பிரச்சனை செய்ததால் பதற்றம் நிலவியது.

    Advertisement

    கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகே ஈஷா யோகா மையம் உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவார்கள். பலர் ஈஷாவில் தங்கி தியானம், யோகா பயிற்சி மேற்கொள்வார்கள். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருப்பதால் இதமான தட்பவெப்பம் நிலவும். மிகவும் அமைதியான அந்த பகுதியில் நேற்று மாலை மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    கத்தியுடன் நுழைந்த இளைஞர்

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அடகட்லா சிவபிரசாத் (26) என்பவர் ஈஷாவில் தங்கி பயிற்சி எடுப்பதற்காக நேற்று காலை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளார். இரண்டு நாட்கள் தங்குவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். சிவப்பிரசாத் டிப்ளமோ படித்துவிட்டு, மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் நுழைவு வாயில் அருகே அந்த இளைஞர் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்தார்.

    அவரை ஈஷா பாதுகாப்புப் பணியாளர்கள் யோகேஸ்வரன், சஜித் மற்றும் முருகேசன் ஆகியோர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது, சிவபிரசாத் தனது பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி, தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஒருவழியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை மடக்கிப் பிடித்து கட்டிவைத்தனர். தொடர்ந்து ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    Advertisement

    காவல் துறை விசாரணை

    இதையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இதுதொடர்பாக ஈஷா பாதுகாப்புப் பொறுப்பாளர் யோகேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில், சிவபிரசாத் மீது தகாத வார்த்தைகளால் பேசியது, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சிவபிரசாத்தின் குடும்பத்தினர் தெலங்கானாவில் உள்ளனர். அவருக்கு ஒரு தம்பி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சிவபிரசாத் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக பெங்களூருவில் சிகிச்சை பெற்றுள்ளார். தொடர்ந்து பயிற்சி பெறுவதற்காக அவர் ஈஷா வந்துள்ளார். அவருக்கு மனநல ஆலோசனை வழங்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    English Summary

    An Youth from Telanagana entered with knife in Isha yoga center Coimbatore. Police arrested him.