கடலூர்: செஞ்சியில் காணாமல் போன சிறுமியை கடலூரில் பார்த்ததாக சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு ஒரு கடையில் யாசகம் கேட்க, ஒரு பெண்ணுடன் அந்த சிறுமி வந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பேரில் விசாரணை நடத்தப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போய் இன்றுடன் 25 நாட்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் சத்தியமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் எந்த தகவலும் கிடைக்காததால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
அவர்களும் ஆலம்பூண்டி கிராமத்தில் முகாமிட்டு பல்வேறு தரப்பினரை கடந்த 15 நாட்களாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 30-க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சிறுமியைத் தேடும் பணியிலும் சந்தேத்துக்குரிய நபர்களிடம் விசாரணை நடத்துவதிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். சிறுமியின் தாய், தந்தை, பாட்டி, மூத்த சகோதரி, அவர் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மாப்பிள்ளை, அவரது தம்பி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் மேல்மலையனூரிலும் விசாரணை நடத்தப்பட்டது. எனினும் சிறுமி குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லை. இந்த நிலையில் கரூர், நாமக்கல் மாவட்டங்களில் சிறுமியை பார்த்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து கரூருக்கு சென்று விசாரணை நடத்தியதில் அங்கு பார்த்த சிறுமி ஹேமலதா இல்லை என தெரியவந்தது. இதையடுத்து நாமக்கல்லில் பெண் ஒருவர் பார்த்ததாக சொன்னதன் அடிப்படையில் அங்கும் விசாரணை நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் புவனகிரியில் சிறுமி போன்ற தோற்றம் கொண்ட ஒருவரை பார்த்ததாக தகவல்கல் கிடைத்தன. இதையடுத்து அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள வயலாமூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி (43). இவர் கொத்தனார். சில தினங்களுக்கு முன்பு புவனகிரி காந்தி சிலை அருகில் உள்ள சலூன் கடையில் இருந்த போது ஒரு பெண்ணும், சிறுமியும் வந்து யாசகம் கேட்டனராம். அவர்களுக்கு அருள்ஜோதி ரூ 100 வழங்கியதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்து செய்தி சேனலை ஏதேச்சையாக பார்த்த போது செஞ்சியில் மாயமான சிறுமி ஹேமலதாவை போல் அந்த யாசகம் கேட்ட சிறுமி இருந்ததாக எண்ணி 100-க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து புவனகிரி காவல் துறையினரும் மாவட்டக் குழந்தை நல ஆலோசகர் ஆகியோர் அருள்ஜோதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அருள்ஜோதி குறிப்பிட்ட இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த காட்சிகளை ஆய்வு செய்த பிறகுதான் அருள்ஜோதி பார்த்தது செஞ்சி சிறுமியா என்பது தெரியவரும். சிறுமி குறித்து நிறைய தகவல்கள் கிடைப்பதால் சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். மறுபுறம் குற்றவாளிகள், சரித்திர பதிவு குற்றவாளிகள், லாரி டிரைவர்கள், வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செஞ்சி சிறுமி தீபாவளிக்குள் கிடைத்துவிட வேண்டும் என புதுத் துணி எடுத்து வைத்துக் கொண்டு தாய் பவானி கண்ணீருடன் காத்திருக்கிறார். சிறுமி காணாமல் போனதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.விசாரணை
நாமக்கல்லில் சிறுமியை பார்த்த பெண்
கடலூர் மாவட்டம்
சலூன் கடை
யாசகம் கேட்ட சிறுமி
தீவிர விசாரணை
அருள்ஜோதி சொன்னது உண்மையா?
புதுத் துணி