திண்ணையில் படுத்த கடலூர் கலா.. காலையில் மக்கள் கண்ட காட்சி.. கண்ணை உறுத்திய சிறுசிறு தங்கத் துகள்கள்?

  • கடலூர்: கடலூரில் 60 வயது கலா என்ற பெண், அதிகாலையில் வீட்டின் வாசலில் ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இரவு வழக்கம்போல் வீட்டுக்கு வெளியே படுத்துத் தூங்கியவர், காலையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தனியாக வசித்து வந்த கலாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்த விசாரணையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்..

    Advertisement

    திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் அடிவாரப் பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி கலா.. 60 வயதாகும் இவர் கணவரை இழந்தவர். சுமார் 20 வருடங்களுக்கு முன்பே பிழைப்பு தேடி கடலூருக்கு வந்துவிட்டார்..

    Advertisement

    திருப்பாதிரிப்புலியூர் பாடலி நகரில் உள்ள புறம்போக்கு இடத்தில் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வறுமையான வாழ்க்கை என்றாலும், யாரிடமும் கையேந்தாமல் கிடைத்த வேலையை செய்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

    திண்ணையில் படுத்திருந்த கலா

    கடலூரில் தங்க நகைகள் செய்யும் பகுதிகளில் இருந்து வெளியேறும் மணலை கலா சேகரித்து வீட்டுக்கு கொண்டு வருவாராம். பிறகு அந்த மணலில் தண்ணீர் ஊற்றி அலசி, அதில் கிடைக்கும் மிகச்சிறிய நகைத் துகள்களை பிரித்து சேகரித்து வந்துள்ளார். இப்படியே வாரத்திற்கு சுமார் ஒரு கிராம் வரை நகைத் துகள்களைச் சேர்த்து, அவற்றை விற்று கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது அன்றாட செலவுகளை சமாளித்து வந்துள்ளார்.

    Advertisement

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல தனது வீட்டின் வெளியில் பாய் விரித்து கலா படுத்துத் தூங்கியுள்ளார். அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள், கலா காது மற்றும் மூக்கு பகுதியில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் வீட்டின் கதவும் திறந்து கிடந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கடலூர் கலா சேகரித்த சிறுசிறு நகைத்துகள்கள்

    தகவல் கிடைத்ததும் கடலூர் எஸ்.பி. விவேகானந்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கலா தனது வீட்டில் சிறுசிறு நகைத் துகள்களை சேகரித்து வைத்திருந்ததும், தற்போது அந்த நகைத் துகள்கள் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. இதனால் நகைக்காக அவரை மர்மநபர்கள் தாக்கி கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    Advertisement

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள், கலாவை எப்போது குறிவைத்தார்கள், வீட்டில் இருந்த நகைத் துகள்களுக்காகத்தான் இந்த கொலை நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி முத்துலட்சுமி

    கலா கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கடந்த மாதம் தூத்துக்குடியிலும் இதேபோன்றே தனியாக வசித்த 56 வயது முத்துலட்சுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கணவரால் கைவிடப்பட்ட முத்துலட்சுமி, மகளுடன் வசித்து வந்த நிலையில், மகள் வெளியூர் சென்றிருந்த இரவு வீட்டுக்குள் புழுக்கமாக இருந்ததால் வெளியே திண்ணையில் படுத்துத் தூங்கியுள்ளார்.

    Advertisement

    மறுநாள் தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல நகைக்காக கலாவதி பலாத்காரம் செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

    வயதான பெண்களின் பரிதாபம்

    இப்போது கடலூரில் 60 வயது கலாவும் இரவு நேரத்தில் தனது வீட்டிற்கு வெளியே படுத்திருந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். வயதான பெண்கள் பலரும் குடும்பத் துணையின்றி தனியாக வாழ வேண்டிய சூழலில், அவர்களின் அன்றாட வாழ்க்கையே இப்படிப்பட்ட ஆபத்தாக மாறுவது கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது..

    பாதுகாப்பற்ற நிலையில் வாழும் முதிய பெண்களை குறிவைத்து பணம், நகைக்காக தாக்கும் மனிதர்களிடம் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டியது அவசியமாகியுள்ளது...!!!

    English Summary

    Cuddalore Kala Slept Outside Her Home.. Morning Scene Raises Questions Over Tiny Gold Particles