கடலூர்: கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் 26 வயதாகும் ரவுடி பிரிதிவிராஜ் என்பவர் பீர் பாட்டிலால் குத்திக்கொல்லப்பட்டுள்ளார். மது அருந்தும்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ரவுடி அருளரசு அவரது தம்பி அன்பரசன் இணைந்து இக்கொலையை செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி அருளரசு என்பவரை கடலூர் போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிருத்விராஜ்.. இவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. அதே ஊரைச் சேர்ந்த அருளரசு மற்றும் அன்பரசு ஆகியோருடன் பிருத்விராஜ் நேற்று இரவு பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கருமாரி கொட்டாயில் அமர்ந்து மது அருந்தி உள்ளார்.
அப்போது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்படவே, சரித்திர பதிவேடு குற்றவாளியான அருளரசு மற்றும் அவரது தம்பி அன்பரசு ஆகியோர் இணைந்து பீர் பாட்டிலை உடைத்து, பிரித்விராஜின் கழுத்தில் குத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பிருத்விராஜ், புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ரெட்டிச்சாவடி போலீசார், வழக்கு பதிவு செய்து, சகோதரர்களான அருளரசு மற்றும் அன்பரசுவை தேடி வந்தனர். அவர்கள் ரெட்டிச்சாவடி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது, அன்பரசு மட்டும் போலீசாரின் பிடியில் சிக்கினார். அருளரசு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பினார். அவர் தப்பி சென்ற தகவல் , கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கடலூர் புதுநகர் சாவடி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தில் அருளரசு தப்பி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக புதுநகர் காவல் ஆய்வாளர் இளவரசி மற்றும் முகிலரசு ஆகியோர் அவரை துரத்தி சென்றனர். எஸ்தலூர் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் தப்பிய அருளரசுவை, உதவி ஆய்வாளர் முகிலரசு பிடிக்க முயன்றார். அப்போது அருளரசு தான் வைத்திருந்த கத்தியால் முகிலரசுவை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். இதையடுத்து ஆய்வார் இளவரசி, உடனடியாக இரண்டு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டார். இதில் அருளரசுவின் வலது காலில் குண்டு பாய்ந்தது. அவர் கீழே விழுந்தார். அருளரசு தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காயம் அடைந்த உதவி ஆய்வாளர் முகிலரசுவும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூரில் கொலை செய்துவிட்டு தப்பிய ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.