அள்ள அள்ள வந்த 28 கோடி பணம்.. 15 கிலோ தங்கம்.. மேற்கு வங்க வரலாற்றிலேயே இது முதல் முறை

  • கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பல ஆண்டுகளாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. பாஜக அங்கு முதல் முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. பாஜக அரசு பொறுப்பேற்றது முதலே ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்களை பட்டியிலிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத சூழலில் மேற்கு வங்காள மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் கல்குவாரி அதிபரின் மைத்துனர் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.28 கோடியே 50 லட்சம் ரொக்கம், 15 கிலோ எடையுள்ள தங்கம் ஆகியவை சிக்கியிருக்கிறது. அந்த வீட்டுக்கு 'சீல்' வைத்த போலீசார், கல்குவாரி அதிபரின் மைத்துனரை கைது செய்தனர்.

    Advertisement

    கடந்த மே மாதம் மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியது. அதன்பிறகு பல விஷயங்களில் அங்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை பாஜக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. மேற்கு வங்காள மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் சட்டவிரோத மணல், கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அதில் ஒரு கல்குவாரியை நடத்தி வந்தவர் தான் துல்லு மொண்டல் என்ற முகமது நசிபுத். இவர் மீது கால்நடைகள் கடத்தல் வழக்கு இருந்தது. கடந்த 2022-ம் ஆண்டு அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இவர் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் தலைமறைவானார்.

    Advertisement

    இந்த சூழலில் பிர்பூம் மாவட்டத்தில், துல்லு மொண்டலின் மைத்துனரும், மேலாளருமான மினார் மொண்டல் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் தீவிர சோதனையை தொடங்கினர். இந்த சோதனையில், போலீசாரே மயங்கி விழும் அளவிற்கு அள்ள அள்ள பணம் வந்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் பணத்தை எண்ணவே முடியாத அளவிற்கு கோடி கோடியாக பணம் இருப்பதை பார்த்து வாயடைத்து போன அதிகாரிகள், நோட்டு எண்ணும் எந்திரங்களையும், நோட்டுக்களை எண்ண கூடுதல் போலீசாரையுயும் வரவழைத்தனர். தொடர்ந்து, போலீசார் பொறுமையாக உட்கார்ந்து அவற்றை எண்ணினார்கள். நேற்று தான் பணத்தை எண்ணி முடித்தார்கள். அங்கு மொத்தம் ரூ.28 கோடியே 50 லட்சம் இருந்தது.

    Advertisement

    தலா ரூ.1 கிலோ எடை கொண்ட 14 தங்கக்கட்டிகள், தலா 100 கிராம் எடையுள்ள 10 தங்க பிஸ்க்கட்டுகள் என 15 கிலோ எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டத. தங்கத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.21 கோடியே 50 லட்சம் ஆகும். இத்தகவலை பிர்பூம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.28 கோடியே 50 லட்சம் ரொக்கம் மற்றும் 15 கிலோ தங்கத்தையும் போலீசார் பெரிய இரும்புப் பெட்டிகளில் வைத்து அங்கிருந்து வேன் மூலம் பத்திரமாக கொண்டு சென்றனர். முதலில், முகமது பஜார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை வங்கியில் செலுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Advertisement

    சமீபகாலத்தில், மேற்கு வங்காளத்தில், சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொத்துகளில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய தொகை இதுதான் என்று போலீசார் கூறினர். அரசு கஜானாவுக்கு செல்ல வேண்டிய பணம் இருப்பதாக போலீசார் கூறினார்கள். இவ்வளவு பணம் எப்படி சேர்க்கப்பட்டது என்றும், வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்றும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே பணம், தங்கம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, அந்த வீட்டுக்கு போலீசார் 'சீல்' வைத்தனர். மினார் மொண்டலை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்அடைக்க முடிவு செய்தனர்.

    இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மினார் மொண்டலின் மனைவி கூறும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துச் சென்ற பெட்டிகளில் என்ன இருந்தது என்று எனக்கோ, என் கணவருக்கோ எதுவும் தெரியாது. தலைமறைவான கல்குவாரி அதிபர் துல்லு மொண்டல்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பெட்டிகளை எங்கள் வீட்டில் வைத்து சென்றார். அதில் ஆவணங்கள் இருப்பதாக கூறிச் சென்றார்.

    Advertisement

    பெட்டிகளின் சாவிகளும் அவரிடம்தான் உள்ளன. நாங்கள் பெட்டிகளை திறக்கவே இல்லை. போலீசார் திறந்த பிறகுதான் பணம், தங்கம் இருப்பது தெரியும். என் கணவருக்கு எதுவும் தெரியாது, ஆனாலும் அவரை கைது செய்து விட்டனர். அந்த பணம் எங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது கிடையாது. நாங்கள் என் கணவரின் ஓய்வூதியத்தில் வாழ்கிறோம் என்றார். இதனிடையே தலைமறைவாக உள்ள துல்லு மொண்டலை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    English Summary

    During a raid by the Anti-Corruption Bureau at the residence of a stone quarry owner's brother-in-law in West Bengal's Birbhum district, ₹28.5 crore in cash and 15 kg of gold were seized. The police sealed the house and arrested the brother-in-law.