டெல்லி: டெல்லியில் திடீரென வீசிய பலத்த புயல் காற்று மற்றும் கனமழையால், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதமடைந்தன. பயணிகளை ஏற்ற, இறக்க பயன்படுத்தப்படும் இரும்பு படிக்கட்டு காற்றில் உருண்டு சென்று விமானத்தின் மீது மோதிய சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நாடு முழுவதும் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. தலைநகர் டெல்லியிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், திடீரென நேற்று வானிலை மாறியது. பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த பலத்த காற்றால் டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம் அடைந்தன.
விமானங்களில் பயணிகளை ஏற்ற, இறக்க பயன்படுத்தப்படும் இரும்பு படிக்கட்டு கட்டுப்பாட்டை இழந்து உருண்டு சென்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் மீது மோதி சேதப்படுத்தியது. டெர்மினல்-2 பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றன. சேதம் அடைந்த விமானங்கள் உடனடியாக அங்கிருந்து இழுத்து செல்லப்பட்டன. டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற பலத்த புயல் காற்று வீசும் என முன்கூட்டியே எச்சரிக்கை எதுவும் கிடைக்கவில்லை என்று விமான நிலையம் மற்றும் விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- விமான நிலையத்தில் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக தரை பகுதி சேவைக்காக வைக்கப்பட்டு இருந்த உபகரணங்கள் காற்றில் இழுத்து செல்லப்பட்டு விமானங்கள் மீது மோதின. இதனால் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் மாலை 4.40 மணியளவில் நடைபெற்றது" என்றனர்.