டெல்லி: 3 மகள்களை பெற்று படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்த முதியவர் தனது கடைசி காலத்தை முதியோர் இல்லத்தில் கழித்தார். தற்போது அவர் உடல்நலக்குறைவால் இறந்த நிலையில் 3 மகள்களும் அவரை பார்க்க நேரில் வராமல் செல்போனில் வீடியோ காலில் இறுதி சடங்கில் பங்கேற்ற சம்பவம் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
மும்பையை சேர்ந்தவர் சிவசரண் ராம் ரத்தன் குப்தா. ஜவுளி விற்பனையாளராக இருந்த இவர் ஹரியானவில் வசித்து வந்தார். இவருக்கு மொத்தம் 3 மகள்கள். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் நேபாளில் உள்ளார். இன்னொரு மகள் உத்தர பிரதேசம், மற்றொரு மகள் மும்பையில் வசித்து வருகிறார்கள்.
சிவசரண் தனது மனைவி மீனா உடன் ஹரியானாவில் சோனிபேட்டையில் வசித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் மீனா இறந்தார். இதனால் சிவசரண் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். அவரை அவரது மகள்கள் கண்டுக்கொள்ளவில்லை. ஒரேயாளாக அனைத்து வேலைகளையும் செய்வதில் சிவசரணுக்கு சிரமம் இருந்தது. இதனால் கடந்த ஓராண்டுக்கு முன்பு சிவசரண் சோனிபேட்டையில் உள்ள மேற்கு ராம் நகரில் அமைந்து இருக்கும் சமாஜ் கல்யாண் ஷிக்ஷா சமிதி நடத்தி வரும் முதியோர் இல்லத்தில் போய் சேர்ந்தார். மனைவி காலமான நிலையில் மகள்கள் தன்னை கவனிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் கூட அவர் வீட்டில் தனியாக இல்லாமல் முதியோர்களுடன் சேர்ந்து இருப்பதால் ஓரளவு மனம் நிறைவு பெற்றார். இந்நிலையில் தான் வயது முதிர்வு காரணமாக சமீபத்தில் அவர் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டார். முதியோர் இல்லம் சார்பில் சிவசரணுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிவசரண் இறந்தார். இதுபற்றி அவரது 3 மகள்களுக்கும் முதியோர் இல்ல நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் இறுதி சடங்கிற்கு வரவில்லை என்று தெரிவித்து விட்டனர். அதோடு தங்களின் தந்தைக்கு முதியோர் இல்லம் சார்பிலேயே இறுதி சடங்குகள் செய்து உடலை தகனம் செய்யும்படி கூறினர். இதனால் முதியோர் இல்ல நிர்வாகம் சிவசரண் உடலுக்கு இறுதி சடங்கு செய்து தகனம் செய்தனர். இதுபற்றி முதியோர் இல்ல நிர்வாகி ஆனந்த் குமார் கூறுகையில், ''சிவசரண் அடிக்கடி தனது மகள்களிடம் செல்போனில் பேசி வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு அவர் பேசுவதை படிப்படியாக குறைத்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரது உடல்நலம் அதிகமாக பாதிக்கப்பட்டது. 3 மகள்களிடமும் தகவல் தெரிவித்தும் அவர்கள் வந்து பார்க்கவில்லை. இறந்தது பற்றி தெரிவித்தும் கூட அவர்கள் வரவில்லை. நேபாளத்தில் ஆசிரியையாக இருக்கும் அவரது மகள் அனிதா ரூ.5,100 அனுப்பி வைத்து தனது தந்தையின் இறுதி சடங்கை நல்லபடியாக முடிக்கும்படி கூறினார். நாங்கள் அதனை செய்தோம். இறுதி சடங்கு நிகழ்வுகளை வீடியோ காலில் பார்த்தார். பிறகு இறுதி சடங்கு தொடர்பான வீடியோக்களை அவர்கள் கேட்டு கொண்டதன் பேரில் செல்போனில் அனுப்பி வைத்தோம். இந்த நிகழ்வை 3 மகள்களும் வீடியோ காலில் பார்த்து கண்கலங்கினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும், 3 மகள்களையம் திட்டி தீர்த்து வருகின்றனர். படிக்க வைத்து நல்லஇடத்தில் திருமணம் செய்து கொடுத்தும் தந்தையின் இறுதிசடங்கில் கூட நேரில் பங்கேற்காமல் ஆன்லைனில் பங்கேற்கின்றனரே என்று கூறி விமர்சனம் செய்து வருகின்றனர்.