டெல்லி: நடப்பாண்டில் டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்ச்சியில் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உள்ளிட்ட உருவ பொம்மைகளுடன் சேர்த்து 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவ பொம்மையும் எரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்து கரப்பான் ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. கரப்பான் ஜனதா கட்சியின் போராட்டம் காரணமாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியை போராட்ட இடத்திற்கான பட்டியலில் இருந்து பாஜக நீக்கி இருக்கிறது. இருப்பினும் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களிலும் சிஜேபி போராட்டம் அதிகரித்து வருகிறது.
சிஜேபி கட்சியினரை சமாளிக்க முடியாமல் பாஜக தடுமாறி வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் டெல்லியில் நடக்கும் ராம்லீகா நிகழ்ச்சியில் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உள்ளிட்ட உருவ பொம்மைகளுடன் சேர்ந்து 30 அடி உயர கரப்பான் பூச்சியின் உருவ பொம்மையும் எரிக்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆண்டு தோறும் நவராத்திரிக்கு அடுத்த நாளான விஜயதசமி அன்று ராம்லீலா கொண்டாடப்படும். அரக்கர்களாக சித்தரிக்கப்படும் ராவணின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்துவர். அந்த வகையில் டெல்லி பிதம்பூராவில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் அரக்கர்களான ராவணன், கும்பகர்ணன் உருவ பொம்மைகளுடன் சேர்த்து கரப்பான பூச்சி பொம்மையும் எரிக்கப்பட உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நிகழ்ச்சியை நடத்தும் கமிட்டியின் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான அசோக் கோயல் பேசுகையில், இந்த செயல்பாடுகள் எந்த அரசியல் உள்நோக்கமும் கொண்டது அல்ல. கரப்பான் பூச்சி உருவ பொம்மையை எரிப்பது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி. தூய்மையை வலியுறுத்த செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக கடந்த 12 ஆண்டுகளில் பாஜகவுக்கு வேறு எந்த கட்சியும் இவ்வளவு குடைச்சலை கொடுத்ததில்லை என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வைத்து சிஜேபி கட்சி அதிர்ச்சி கொடுத்தது. தற்போது ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. சிஜேபி கட்சிக்கு பல்வேறு மாநில கட்சிகளும் ஆதரவு அளித்து வருகின்றன. அதேபோல் கம்யூனிஸ்ட் இயக்கங்கள், மாணவர்கள் அமைப்புகள் உடனிருந்து போராட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் சிஜேபி போராட்டம் மத்திய பாஜக அரசை மீண்டும் அடி பின்னோக்கி தள்ளுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.