டெல்லி: டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்த போராட்டத்தில், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக 'கமிட்டி டு ப்ரோடெஸ்ட் ஜர்னலிஸ்ட்' (CPJ) என்கிற அமைப்பு செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுக்கு பொறுப்பேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அக்டோபர் 10,11 தேதிகளில் டெல்லி, அகமதாபாத், புனே மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களில் 43 பேரை காவல்துறை கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தது.
பத்திரிகையாளர்கள் தங்களின் அடையாள அட்டைகளை காட்டிய போதும், காவல்துறையினர் அவர்களை பலவந்தமாக இழுத்துச் சென்று.. பேருந்துகளில் ஏற்றியிருக்கிறார்கள் என்று CPJ கூறியிருக்கிறது. கைது மட்டுமல்லாது 5ம் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர் என்றும் CPJ குற்றம்சாட்டியிருக்கிறது. 'தி வாஷிங்டன் போஸ்ட்' இதழில் கட்டுரையாளர் ராணா அயூப் லத்தியால் தாக்கப்பட்டார். 'தி கேரவன்' இதழின் ரேயான் தாமஸ் என்ற பத்திரிகையாளர் துப்பாக்கிப்பிடியால் வயிற்றில் குத்தப்பட்டு, கணத்தில் அறையப்பட்டார். 'உல்டா சஸ்மா' நிறுவனர் பிரக்யா மிஸ்ரா, 'ராய்ட்டர்ஸ்', 'ஸ்க்ரோல்', 'நியூஸ் லாண்ட்ரி' மற்றும் 'தி குவின்ட்' ஆகிய ஊடகங்களின் செய்தியாளர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவார்கள் என்று CPJ அமைப்பு செய்தியை வெளியிட்டு இருக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், 'சியாசத் டெய்லி' செய்தியாளர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டு, அதிலிருந்த அனைத்து டேட்டாக்களும் முழுமையாக அழிக்கப்பட்டன. மற்றொரு செய்தியாளரின் மைக்ரோ போன் உடைக்கப்பட்டது. போராட்டம் குறித்த வீடியோக்களை ஷேர் செய்து வந்த சுயாதீன பத்திரிகையாளர் ஷியாம் மீரா சிங்கின் எக்ஸ் கணக்கு அரசின் சட்ட பூர்வ கோரிக்கையை தொடர்ந்து இந்தியாவில் முடக்கப்பட்டது. போராட்டத்தை ஒடுக்க டெல்லியில் சுமார் 23,000 துணை ராணுவப் படையினரும், 15,000 டெல்லி போலீஸ்சாரும் குவிக்கப்பட்டனர். மத்திய டெல்லி பகுதிகளில் 4 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பல மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டன. வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகளை செய்ய எந்த தடையும் விதிக்கப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இப்படி உறுதியளித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே.. பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை, இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்திற்கு ஏற்பட்ட ஒரு களங்கம் என்றும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அத்துமீறல் என்றும் 'கமிட்டி டு ப்ரோட்டஸ்ட் ஜர்னலிஸ்ட்' (CPJ) என்கிற அமைப்பு கண்டம் தெரிவித்திருக்கிறது. பத்திரிகையாளர்கள் போராட்டக்காரர்களுக்கு மிக அருகில் நின்றதால் தவறுதலாக கைது செய்யப்பட்டு இருக்கலாம் என்று டெல்லி காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.