5 ஆண்டுகளில் 45 மாணவர்கள் தற்கொலை! ஐஐடிகளில் பூதாகரமாக வெடிக்கும் சாதிய பாகுபாடு? ஷாக் டேட்டா!

  • டெல்லி: இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை என்பது பெரிய விஷயமாக வெடித்துள்ளது. இதற்கிடையே இது தொடர்பாக சில அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் உள்ள ஐஐடிகளில் 45 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஷாக் டேட்டா வெளியாகியுள்ளது.

    நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாணவர் தற்கொலை தொடர்பாக கடந்த டிசம்பர் 8ம் தேதி கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அதற்கு மத்திய அரசு அளித்திருந்த பதிலில் பல அதிர்ச்சி தகவல்கள் இருந்தன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் உள்ள 23 ஐஐடிகளில் 2020-21 முதல் 2024-25 வரையிலான 5 ஆண்டுகளில் 45 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மாணவர் தற்கொலை

    அதில் 28 பேர் பட்டியலின, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் 62 சதவீதத்துக்கும் அதிகமானோர், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளை சேர்ந்தவர்களாகும். இதில் 12 பேர் ஓபிசி பிரிவையும், 9 பேர் எஸ்சி பிரிவையும், 7 பேர் எஸ்டி பிரிவையும் சேர்ந்தவர்கள். மேலும், 16 பேர் பொதுப்பிரிவையும், ஒருவர் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பிரிவையும் சேர்ந்தவர் ஆகும்.

    ஐஐடிகளில் மாணவர் தற்கொலைகள் 2023-24 கல்வியாண்டில் திடீரென அதிகரித்துள்ளன. அந்த ஆண்டில் மட்டும் 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில் 6 தற்கொலைகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், ஒரே ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2024-25ல் மேலும் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 2024-25ல் உயிரிழந்த 13 பேரில் 4 பேர் ஓபிசி, 3 பேர் எஸ்டி, 2 பேர் எஸ்சி பிரிவுகளை சேர்ந்தவர்கள். 4 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.

    எங்கே அதிகம்

    ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சமாக ஐஐடி ஹைதராபாத்தில் 7 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. ஐஐடி காரக்பூர், ஐஐடி டெல்லி மற்றும் ஐஐடி கான்பூரில் தலா 6 பேரும், சென்னை ஐஐடியில் 5 பேரும், ஐஐடி வாரணாசியில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    தற்கொலைகள் தவிர, கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடிகளில் 8 இயற்கைக்கு மாறான மரணங்களும் தனியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த 8 மரணங்கள் 45 தற்கொலைகள் என்ற எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில் உயிரிழந்த மாணவர்கள் எந்தப் பாடப்பிரிவில் படித்தனர்.. அவர்கள் உயிரிழக்க காரணம் என்ன என்பது குறித்த விரிவான தகவல்கள் இடம்பெறவில்லை.

    மும்பை மாணவர்

    இதற்கிடையே ஐஐடி மும்பையில் 22 வயதான இரண்டாம் ஆண்டு பி டெக் மாணவர் சாஹில் வாகோடே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ள தகவல்கள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. எனர்ஜி சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் துறையில் படித்து வந்த சாஹில், செப்டம்பர் 18ம் தேதி மாலை விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான், தேர்வில் செல்போன் பயன்படுத்தி சாட்ஜிபிடியிடம் தேர்வு எழுதியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    இருப்பினும், சாஹிலின் பெற்றோர் வேறு விதமான தகவல்களை கூறுகிறார்கள். அதாவது தங்கள் மகன் ஐஐடியில் சாதிய பாகுபாட்டை எதிர்கொண்டதாக கூறியுள்ளனர். அவரது தாயார் சோனாலி பேசுகையில், "நான் கடந்த செப்டம்பர் 13ம் தேதி என் மகனை சந்தித்தேன். என்னை சித்திரவதை செய்கிறார்கள்; சாதியை குறிப்பிட்டு இழிவாகப் பேசுகிறார்கள் என புலம்பினார்" என்று கூறினார். அப்போது ஐஐடியில் சேர்வதே மிகவும் கடினம் என்பதால் அனைத்தையும் பொறுத்து கொள்ளுமாறு தந்தை ரவீந்திரா வாகோடே தனது மகனிடம் கூறியுள்ளார்.

    வழக்குப்பதிவு

    இருப்பினும், மும்பை ஐஐடி நிர்வாகம் இதை மறுத்துள்ளது.. சமீப காலத்தில் சாஹில், எஸ்சி/எஸ்டி பிரிவில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாஹில் மரணம் தொடர்பாக மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், ஐஐடி மும்பை டீன் பதவியில் இருந்து பேராசிரியர் சூர்யநாராயணா தூல்லாவை நீக்கியது. சாஹில் தேர்வு எழுதியபோது அவரே கண்காணிப்பாளராக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சாஹிலின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பதிவு செய்த எஃப்.ஐஆரிலும் பேராசிரியர் சூர்யநாராயணா பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Data shared by the Central Government shows that 45 students died by suicide across 23 IITs between 2020-21 and 2024-25(பெரிதாக வெடிக்கும் ஐஐடி மாணவர் தற்கொலை விவாரம்): IIT Students issue latest news in tamil.