டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் 47 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது காவல்துறை நடத்திய தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த வினீத் ஜோஷி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நரேஷ் பால் கங்வார் உயர்கல்வித் துறை செயலாளராகவும், டி.கே. அனில் குமார் புதிய பள்ளிக் கல்விச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் 47 பேரை மத்திய அரசு பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல அதிகாரிகளுக்கு நேரடியாக நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பணி நீக்கம் செய்யப்படும் அதிகாரிகளில் குற்றமிழைத்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் மீதான நடவடிக்கைக்கு, மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரை செய்ததாகவும் அதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது