டெல்லி: ''48 மணிநேரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்'' என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வார்னிங் செய்துள்ளது.
டெல்லியில் இன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்ட விவகாரம் பற்றி பேசி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஞானேஷ் குமார் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார். அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வார்னிங் செய்துள்ளது. இதுதொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கூறுகையில், ''தேர்தல் ஆணையம் தொடர்பான நேற்று வெளியான அறிக்கை என்பது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நாட்டின் மிகப்பெரிய துரோகி என்பதை நிரூபிக்கிறது. அவரே நாட்டின் மிகப்பெரிய தேசவிரோதி. அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்திற்கு அவரே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார். ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையரானதிலிருந்து, யார் வாக்களிக்கலாம், யார் வாக்களிக்கக்கூடாது என்பதை அரசாங்கமே தீர்மானிக்கிறது. இதுதான் ஜனநாயகமா?. மொத்தம் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது சிறிய எண்ணிக்கை அல்ல. 2024 லோக்சபா தேர்தலில், எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் (NDA) இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 2% மட்டுமே. 13 கோடி வாக்குகளை நீக்குவது என்பது மொத்த வாக்குகளில் சுமார் 13 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை நீக்குவதற்கு சமம். வெற்றி பெற்றதன் 2 சதவீத வாக்கு இடைவெளியை அதிகரித்து இனி ஒருபோதும் ஆட்சியை இழக்காதவாறு இருக்க ஞானேஷ் குமார் வேண்டுமென்றே வாக்குகளை நீக்குகிறாரா? இது ஏன் செய்யப்படுகிறது? இவ்வளவு வாக்குகளை நீக்க வேண்டிய அவசியம் என்ன இருந்தது?. ஞானேஷ் குமார் 48 மணிநேரத்துக்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாடு தழுவிய அளவில் பெரிய போராட்டம் நடத்தப்படும்" என்று வார்னிங் செய்துள்ளார்.