டெல்லி: இந்த காலத்தில் விமான பயணம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேருந்து அல்லது ரயிலில் செல்லும்போது எதாவது மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக முடியும். ஆனால், விமானம் என்பதால் விமானம் தரையிறங்கும் வரை நமக்கு மருத்துவ உதவி எதுவும் கிடைக்காது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
கோலாலம்பூரில் இருந்து சிட்னி நோக்கிச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 58 வயது இந்தியர் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த 8 மணி நேரம் விமானப் பயணத்தின்போது அவருக்கு ஆஸ்துமா பாதிப்பு தீவிரமடைந்ததாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் இருந்த ஊழியர்களும் சக பயணிகளும் அவருக்கு முதலுதவி அளிக்க முயன்றனர். இருப்பினும், அவரை காப்பாற்ற முடியவில்லை.
விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 7.43 மணியளவில் சிட்னி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இது தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் போலீசாருக்கு விமான நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணி ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, அதிகாரிகள் அங்கு சென்றனர். இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை என்றும் இது தொடர்பாக கூடுதல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆஸ்துமா தாக்குதல் ஏற்படும்போது நுரையீரலுக்குச் செல்லும் காற்றுப்பாதைகள் வீக்கமடைந்து சுருங்குகின்றன. இதனால் காற்று உள்ளேயும் வெளியேயும் செல்வது கடினமாகிறது. மூச்சுத்திணறல் அதிகரிப்பது, மூச்சில் விசில் போன்ற சத்தம், இருமல் மற்றும் மார்பு இறுக்கம் ஆகியவை ஆஸ்துமாவின் அறிகுறிகளாக உள்ளன. பாதிப்பு தீவிரமானால், மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் காரணமாக ஒருவர் சரியாக பேசவோ நடக்கவோ முடியாத நிலை ஏற்படலாம். ஆஸ்துமா தீவிரமடையும்போது சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால் உயிரை காப்பாற்றலாம். ஆனால், விமானத்தில் இது போன்ற சுவாசப் பிரச்சினை ஏற்படும்போது உடனடியாக மருத்துவமனை சிகிச்சை கிடைக்காது என்பதால் நிலைமை கவலைக்குரியதாக மாறலாம். எனவே, அறிகுறிகள் தீவிரமாகும் வரை காத்திருக்காமல் உதவி கேட்பது முக்கியம். விமானத்தில் ஆஸ்துமா தீவிரமடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.! மூச்சுவிடுவதில் திடீர் சிரமம் ஏற்பட்டால் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக விமான ஊழியர்களிடம் உதவி கேட்க வேண்டும். ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்பதால் தாமதம் இருக்கவே கூடாது. படுத்துக் கொள்வதைவிட நேராக உட்காருவது உதவியாக இருக்கும். பதற்றம் மூச்சுத்திணறலை மேலும் அதிகரிக்கும் என்பதால், முடிந்தவரை அமைதியாக இருக்க வேண்டும். மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட இன்ஹேலர் இருந்தால், அதை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு இன்ஹேலரையும் ஒவ்வொரு மாதிரி பயன்படுத்த வேண்டி இருக்கும் என்பதால் மருத்துவர் வழிகாட்டுதலையே பின்பற்ற வேண்டும். ஒருவேளை இன்ஹேலரை பயன்படுத்திய பிறகும் மூச்சுத்திணறல் குறையாமல் இருந்தால் அவசர மருத்துவ உதவி தேவை என அர்த்தம். ஆஸ்துமா உள்ளவர்கள் பயணம் செய்யும்போது இன்ஹேலரை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக இன்ஹேலரை எளிதாக எடுக்கும் இடத்தில் அதை வைக்க வேண்டும். மேலும், இன்ஹேலர் காலாவதியாகாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். ஆஸ்துமா தாக்குதல் வேகமாக தீவிரமடையக்கூடும் என்பதால், அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனித்து, பரிந்துரைக்கப்பட்ட மருந்தை முறையாக எடுத்து கொள்ள வேண்டும்!என்ன நடந்தது!
ஆஸ்துமா தாக்குதல்
மூச்சுவிடுவதில் சிரமம்
கவனம்!