8வது சம்பள கமிஷன்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹69000 குறைந்தபட்ச சம்பளம்? வெளியானது அதிரடி பரிந்துரை


  • டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு முக்கியமான செய்தி வெளியாகி உள்ளது. புதிய எட்டாவது மத்திய சம்பள கமிஷனிடம் (8th Central Pay Commission) மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான 'ஜே.சி.எம்' (National Council - JCM) தங்களின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவைச் சமர்ப்பித்துள்ளது.

    Advertisement

    இந்த மனுவில் ஊழியர் சங்கம் கேட்டுள்ள முக்கியமான கோரிக்கைகள் என்னென்ன, இதனால் சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை இந்தச் செய்தியில் விரிவாகப் பார்ப்போம்.

    Advertisement

    முக்கியக் கோரிக்கை: 17 லெவல்கள் இனி 13 ஆகக் குறையுமா?

    தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு லெவல் 1 முதல் லெவல் 17 வரை என மொத்தம் 17 விதமான சம்பள அடுக்குகள் (Pay Levels) நடைமுறையில் உள்ளன. இந்த அடுக்குகளைக் குறைத்து, சில லெவல்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்று ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    அவர்கள் கொடுத்துள்ள பரிந்துரையின்படி:

    தற்போது இருக்கும் லெவல் 2 மற்றும் லெவல் 3 ஆகிய இரண்டையும் ஒன்றாக இணைத்து, 'லெவல் 3' என்ற ஒரே அடுக்காக மாற்ற வேண்டும்.

    Advertisement

    அதேபோல, லெவல் 4 மற்றும் லெவல் 5 ஆகியவற்றை இணைத்து 'லெவல் 5' ஆக மாற்ற வேண்டும்.

    லெவல் 7 மற்றும் லெவல் 8 ஆகியவற்றை இணைத்து 'லெவல் 8' ஆக மாற்ற வேண்டும்.

    லெவல் 9 மற்றும் லெவல் 10 ஆகியவற்றை இணைத்து 'லெவல் 10' ஆக மாற்ற வேண்டும்.

    மேலும், ஒருமுறை மட்டும் சிறப்பு நடவடிக்கையாக லெவல் 5-ல் உள்ளவர்களை லெவல் 6 உடன் இணைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

    இப்படிச் செய்வதன் மூலம், பல பிரிவுகளில் உள்ள ஊழியர்களின் ஆரம்பக்கட்ட அடிப்படைச் சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்பு ஏற்படும்.

    Advertisement

    சம்பள உயர்வு கணக்கு: 3.833 பிட்மெண்ட் ஃபேக்டர் (Fitment Factor)

    ஊழியர் சங்கத்தின் இரண்டாவது மிக முக்கியமான கோரிக்கை 'பிட்மெண்ட் ஃபேக்டர்' பற்றியது. புதிய சம்பள கமிஷன் வரும்போது, தற்போதைய அடிப்படைச் சம்பளத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணால் பெருக்கி புதிய சம்பளத்தை நிர்ணயிப்பார்கள். அந்தப் பெருக்குத்தொகை எண்ணைத்தான் 'பிட்மெண்ட் ஃபேக்டர்' என்பார்கள். ஊழியர் சங்கம் இந்த முறையை 3.833 ஆக வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.

    இதன்படி பார்த்தால், மத்திய அரசு பணியில் சேரும் ஒரு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் தற்போதைய 18,000 ரூபாயில் இருந்து, நேரடியாக 69,000 ரூபாயாக உயரக்கூடும்!

    Advertisement

    எந்தெந்த லெவலுக்கு எவ்வளவு சம்பளம் வரலாம்?

    ஊழியர் சங்கம் கொடுத்துள்ள பரிந்துரைகள் ஏற்கப்பட்டால், ஊழியர்களின் புதிய சம்பள உயர்வு தோராயமாக எப்படி இருக்கும் என்று அவர்கள் கணக்கிட்டுக் கொடுத்துள்ளனர்:

    ஆரம்ப நிலை ஊழியர்களுக்கு (தற்போதைய லெவல் 1) குறைந்தபட்ச சம்பளம் 69,000 ரூபாயாக இருக்கும். லெவல் 2 மற்றும் 3 ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்படும் புதிய சம்பள அடுக்கில் உள்ளவர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளம் 83,200 ரூபாயாக உயர வாய்ப்புள்ளது.

    அடுத்ததாக, லெவல் 4 மற்றும் 5 ஆகிய அடுக்குகள் இணைக்கப்பட்ட பின், அந்தப் பிரிவில் உள்ள ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 1,12,000 ரூபாயாக மாறக்கூடும். தற்போதைய லெவல் 6-ல் உள்ள ஊழியர்களுக்குப் புதிய கணக்கின்படி குறைந்தபட்ச சம்பளம் 1,35,700 ரூபாயாக உயரும்.

    Advertisement

    உயரதிகாரிகள் மட்டத்தில், லெவல் 7 மற்றும் 8 இணைப்பிற்குப் பிறகு குறைந்தபட்ச சம்பளம் 1,82,500 ரூபாயாகவும், லெவல் 9 மற்றும் 10 இணைப்பிற்குப் பிறகு குறைந்தபட்ச சம்பளம் 2,15,100 ரூபாயாகவும் உயரப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதர உயர் பதவிகளில் உள்ள லெவல் 11 முதல் 17 வரை உள்ள அடுக்குகள், 3.833 என்ற அதே பெருக்கு விகிதத்தைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்படும்.

    இது எப்போது அமலுக்கு வரும்?

    மத்திய அரசு ஊழியர்களே, அவசரப்பட வேண்டாம்! இவை அனைத்தும் ஊழியர் சங்கம் தங்களின் கோரிக்கையாக 8வது சம்பள கமிஷனிடம் சமர்ப்பித்துள்ள பரிந்துரைகள் மட்டுமே. மத்திய அரசு இன்னும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

    தற்போது, சம்பள கமிஷன் பல்வேறு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகளிடம் இருந்து கருத்துக்களையும் கோரிக்கைகளையும் பெற்று வருகிறது. அனைத்தையும் பரிசீலித்த பிறகே, சம்பள கமிஷன் தனது இறுதிப் பரிந்துரையை அரசிடம் வழங்கும். அதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம். அரசு இறுதி முடிவு எடுத்த பிறகே உண்மையான சம்பள உயர்வு விவரங்கள் தெரியவரும்.

    English Summary

    8th Pay Commission: Central Government Employees Demand 3.833 Fitment Factor, Minimum Salary Hike to ₹69,000