டெல்லி: பெட்ரோலில் ஏற்கனவே மத்திய அரசு எத்தனாலை கலந்து வரும் சூழலில் இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே மத்திய அரசு பெட்ரோலில் 50%க்கு மேல் எத்தனால் கலக்க திட்டமிட்டுள்ளதாகவும் விமான எரிபொருளில் கூட எத்தனால் கலக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மத்திய அரசு இப்போது எத்தனால் கலப்பு பெடரோலுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. அந்நிய செலாவணி பாதுகாப்பு, விவசாயிகள் வருமானம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் எத்தனால் கலப்பு கட்டாயம் என மத்திய அரசு கூறி வருகிறது. இருப்பினும், கட்டாய எத்தனால் கலப்பு திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சில பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது மத்திய அரசு E20ஐ தாண்டி பெட்ரோலில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக எத்தனால் கலக்க திட்டமிட்டுள்ளதாகவும், விமான எரிபொருளிலும் எத்தனால் கலக்க முயல்வதாக குற்றம்சாட்டினார். மேலும், E20 பெட்ரோல் தொடர்பாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையை மத்திய அரசு அழுத்தம் கொடுத்து திரும்ப பெற வைத்ததாகவும் அவர் கூறினார். கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, "மத்திய அரசு E20-ஐ தாண்டி எத்தனால் கலவையை அதிகரிக்க எந்த முடிவும் எடுக்கவில்லை. இது முற்றிலும் போலியான தகவல்" என்று தெரிவித்தார். மேலும், எத்தனால் கலவையை அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்க வேண்டுமானாலும், அதற்கு முன் ஆய்வுகள், சோதனைகள் நடத்தப்படும் என்றும் வாகன உற்பத்தியாளர்கள், எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல கட்டங்களாக எத்தனால் கலப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், E20 கூட விரிவான ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகே அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், நாட்டில் விற்பனை செய்யப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல், இந்திய தர நிர்ணய அமைப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு தர சோதனைகளுக்குப் பிறகே பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாகவும் அமித் மாளவியா விளக்கமளித்தார். கெஜ்ரிவால் தனது மற்றொரு போஸ்டில் விமான எரிபொருளிலும் எத்தனால் கலக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது விமான பாதுகாப்புக்கு ஆபத்தானது என்றும் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மாளவியா, சாதாரண எத்தனாலை விமான எரிபொருளில் கலக்கும் எந்தவொரு திட்டமும் அரசுக்கு இல்லை என அவர் கூறினார். அதேநேரம் SAF தொடர்பான கொள்கை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படும் இந்த எரிபொருள் வழக்கமான விமான எரிபொருளுக்கு இணையானது என்றும் தெரிவித்தார். மேலும், SAF பயன்பாட்டுக்கு முன் சர்வதேச தரநிலைகளின்படி கடுமையான சோதனைகள் மற்றும் சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் சர்வதேச விதிமுகளைகளுக்கு ஏற்பவே சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அப்படியிருக்கும்போது, SAFஐ சாதாரண எத்தனால் என்பது போல சொல்வது தவறான தகவல் என்றும், இது விமான பாதுகாப்பு குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அமித் மாளவியா குற்றம்சாட்டினார். இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்காத கெஜ்ரிவால்.. E20 பெட்ரோல் தொடர்பாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையை மத்திய அரசு அழுத்தம் கொடுத்து திரும்ப பெற வைத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், அதிபர் டிரம்பின் அழுத்தம் காரணமாக அமெரிக்காவில் இருந்து எத்தனால் வாங்கவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.அரவிந்த் கெஜ்ரிவால்
எத்தனால் கலப்பு
விமான எரிபொருள்
கடுமையான சோதனை