இந்தியாவின் கல்வித்துறையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் அச்சுறுத்தி வரும் நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வுகள் தொடர்பான குளறுபடிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று ஒரு மிகப்பெரிய இளைஞர் எழுச்சிப் போராட்டம் வெடித்துள்ளது.
சமூக வலைதளங்களில் கிண்டலாக தொடங்கப்பட்டு ஒரு பக்கம் தற்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது 'காக்கரோச் ஜனதா கட்சி' (CJP) தலைமையில் நடக்கும் இந்த மாபெரும் போராட்டத்தால் ஒட்டுமொத்த டெல்லியும் ஸ்பித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இன்று காலை டெல்லி வந்திறங்கிய இந்த இயக்கத்தின் 30 வயது இளம் நிறுவனர் அபிஜீத் திப்கே, நேரடியாக ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திற்கு வந்து போராட்டத்தை முன்னின்று வழிநடத்தத் தொடங்கியுள்ளார்.
"இந்த நாட்டின் இளைஞர்கள் இனிமேல் எதற்கும் பயப்படப் போவதில்லை; அவர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடுவார்கள். கரப்பான்பூச்சிகள் எதைக் கண்டும் அஞ்சுவதில்லை, அவை ஒருபோதும் சாவதும் இல்லை" என CJP பக்கத்தில் போராட்டம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த ஜந்தர் மந்தர் பகுதியும் இளைஞர்களின் முழக்கங்களால் அதிர்கிறது. ஆன்லைன் மூலமாகத் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இன்று காலை முதலே ஜந்தர் மந்தர் பகுதியில் அணிவகுக்கத் தொடங்கினர். இந்த மாபெரும் போராட்டத்திற்கு பின்னால், ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு கோரிக்கை மட்டும்தான் உள்ளது. நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வுகள் தொடர்பான குளறுபடிகளுக்கு முழுப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பது தான். இதை உணர்த்தும் வகையில் CJP கட்சியின் புதிய டிவிட்டர் கணக்கான Cockroach is Back பக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஓரே விஷத்திற்காக இணைந்துள்ளனர், அது தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பது தான் என டிவீட் செய்து போராட்டத்தின் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளனர். போராட்டக் களத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காக்கரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, "மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை இந்த இளைஞர் பட்டாளம் ஓயப்போவதில்லை; எங்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடையும்" என்று மிகவும் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட இளம் மாணவிகள் மட்டுமன்றி, மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் மனநல மருத்துவர்கள் (Therapists) மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலதரப்பட்ட பிரிவினரும் ஜந்தர் மந்தரில் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தக் கூடிவருகின்றனர். "கல்வி என்பது எங்களது அடிப்படை உரிமை, அதை முறைகேடுகள் மூலம் பறிக்க யாருக்கும் அதிகாரமில்லை" என்று போராட்டத்தில் பங்கேற்ற ஒரு இளம் மாணவி மிகுந்த வலியோடும் வேதனையோடும் பேசினார். தேர்வு எழுதும் கோடிக்கணக்கான மாணவர்களின் இந்த தார்மீகக் குமுறல்களும் கண்ணீரும் தற்போது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.கரப்பான்பூச்சிகள் ஒருபோதும் சாவதில்லை
தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்
கல்வி எங்களது உரிமை