டெல்லி: டெல்லியில் நேற்று தடையை மீறி தேசியக்கொடி போராட்டத்தில் ஈடுபட முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை போலீசார் கைது செய்தனர். இரவு ஆகியும் அவரை போலீசார் விடுவிக்கவில்லை. அவர் மீது புதிதாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அபிஜித் தீப்கேவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் தேசியக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்தார். இந்த போராட்டத்திற்கு நேற்று போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதுமட்டுமின்றி அபிஜித் தீப்கே இந்த போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்று போலீசார் 2 நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அபிஜித் தீப்கே அதனை மதிக்கவில்லை. டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) செய்தி தொடர்பாளர் அனிஷ் கவாண்டி வீட்டில் தங்கியிருந்த அபிஜித் தீப்கே கையில் தேசியக்கொடி ஏந்தி நேற்று மாலையில் போராட்டத்திற்கு புறப்பட்டார். அவரை போலீசார் வீட்டு வாசலிலேயே மடக்கி பிடித்து கைது செய்தனர். போராட்டத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பொதுவாக இப்படி முன்னெச்சரிக்கை கைது செய்யப்பட்டதால் அவர்களை மாலை 6 மணிக்கு மேல் போலீசார் விடுவிப்பார்கள். ஆனால் அபிஜித் தீப்கேவை போலீசார் தற்போது வரை விடுவிக்கவில்லை. இதனால் போலீசார் அபிஜித் தீப்கேவை சிறையில் அடைக்க முடிவெடுத்து இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் அபிஜித் தீப்கே மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 170 (முன்கூட்டிய கைது) மற்றும் 126 (அமைதியை மீறுவதற்கான பிணையை மீறுதல்) என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் தற்போது அபிஜித் தீப்கேவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10ம் தேதி அபிஜித் தீப்கேவை போலீசார் டெல்லியில் போராட விடாமல் விமானத்தில் வைத்து கைது செய்தனர். மறுநாள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படத்திய போலீசார் ரூ.50 ஆயிரம் பிணையும் அடுத்த ஓராண்டுக்கு அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்று கையெழுத்து வாங்கினர். இதன்மூலம் அனுமதியில்லாத போராட்டங்களில் அபிஜித் தீப்கே பங்கேற்க கூடாது. அப்படி பங்கேற்றால் அது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். ஆனால் அபிஜித் தீப்கேவின் நேற்றைய போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதோடு போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி அவர் போராட முயன்றதால் கைது செய்யப்பட்டார். இதனால் தான் அவர் தற்போது வரை விடுவிக்கப்படவில்லை. சற்று நேரத்தில் அவரை டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த திட்டமிட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பிறகு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கமாட்டேன் என்ற பிணையை மீறியதாக அபிஜித் தீப்கேவிற்கு எதிராக போலீசார் வாதம் வைக்கலாம். இதனை ஏற்று நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட வாய்ப்புள்ளது. ஏனென்றால் அபிஜித் தீப்கேவிற்கு முன்பாக கரப்பான்பூச்சி கட்சியை சேர்ந்த சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா என்று 2 பேரும் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் உள்ளனர். இவர்கள் 3 பேரும் தான் கடந்த 10ம் தேதி விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, ஓராண்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்ற பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 14ம் தேதி சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராடியதால் கைது செய்யப்பட்டதோடு 5 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த பாணியில் அபிஜித் தீப்கேவையும் போலீசார் திகார் சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது. இது நடக்கும் பட்சத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் முகமாக இருக்கும் அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் சிறையில் இருப்பார்கள். இதனால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செயல்பாடு முடங்க வாய்ப்புள்ளது. இருப்பினும் இவர்கள் 3 பேர் இல்லாவிட்டால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செயல்பாடுகளை அதன் தேசிய அமைப்பு பொறுப்பாளர் அஜிங்கியா ஷிண்டே முன்னெடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முக்கிய 3 நிர்வாகிகள் இல்லாமல் இருப்பது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கான பின்னடைவாகும்.