எவ்வளவு கஷ்டம் தருவீர்கள்.. பாட்டி இறந்ததை போலீஸ் சொன்னபோது என்ன நடந்தது தெரியுமா! தீப்கே பதிலடி

  • டெல்லி: தனது பாட்டியின் மறைவு செய்தியை தெரிவித்தபோது, குடும்பத்தினரிடம் பேசவும் சொந்த ஊருக்குச் சென்று இறுதிச்சடங்கில் பங்கேற்கவும் உதவ முன்வந்ததாக டெல்லி போலீசார் கூறுவது பொய் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே பதிலடி கொடுத்துள்ளார். உறவினரின் நம்பரை எடுக்க கூட தனது செல்போனை டெல்லி போலீசார் தரவில்லை எனவும் குறிப்பிட்டார்.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டத்தை அறிவித்திருந்த கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தீப்கே தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது அவரது பாட்டி மறைந்தார். இந்த தகவலை போலீசார் தெரிவித்த போதிலும், குடும்பத்தினரிடம் பேச அனுமதிக்கவில்லை என கரப்பான் பூச்சி கட்சி குற்றஞ்சாட்டி இருந்தது.

    Advertisement

    டெல்லி போலீசார்

    இதற்கிடையே டெல்லி போலீசார் இது தொடர்பாக விளக்கமளித்தனர். தடுப்புக் காவலில் இருந்தபோது பாட்டி உயிரிழந்த செய்தியை தெரிவித்தது மட்டுமின்றி, குடும்பத்தினருடன் பேசவும் இறுதிச்சடங்கில் பங்கேற்க சொந்த ஊருக்குச் செல்லவும் உதவ முன்வந்ததாக டெல்லி போலீசார் கூறியிருந்தனர். மேலும், இது தொடர்பான வீடியோவையும் டெல்லி போலீசார் வெளியிட்டு இருந்தனர்.

    மறுப்பு

    ஆனால், போலீசாரின் இந்த கூற்றை மறுத்துள்ள தீப்கே, தன்னிடம் செல்போன் இல்லாத நிலையில் உறவினர்களின் நம்பர்களை எப்படி சொல்ல முடியும் என கேள்வி எழுப்பினார். அதாவது போலீசார் தனது செல்போனை தர மறுத்துவிட்டதாகவும் நம்பரை மட்டும் சொல்ல சொன்னதாகவும் தெரிவித்தார். உறவினர் நம்பர் தனக்கு நினைவில் இல்லை என சொன்ன போதிலும் அதை போலீசார் கேட்கவில்லை எனவும் தெரிவித்தார்.

    Advertisement

    அவர் மேலும், "எனது பாட்டியுடன் வசிக்கும் உறவினரிடம் பேச வேண்டும் என்று பலமுறை கேட்டேன்.. அந்த உறவினரின் போன் நம்பரை எடுத்து தர சில நிமிடங்கள் மட்டும் செல்போனை தருமாறு கேட்டேன். ஆனால், அதற்குக்கூட அனுமதி வழங்கப்படவில்லை. டெல்லி போலீசார் ஏன் எனது செல்போனை பயன்படுத்த அனுமதிக்கவில்லை? வழக்கறிஞரிடம் பேசுவதற்காகவும் கேட்டேன். அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது" என்றார்.

    காலை 3.30 மணிக்கு

    மேலும், அதிகாலை 3.30 மணிக்கு தனது தந்தையை தொடர்புகொண்டு, நீண்ட காலம் சிறைக்கு செல்ல நேரிடலாம் என்று தெரிவிக்குமாறு போலீசார் கூறியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவர் மேலும், "தனது தாயை இழந்த தந்தையிடம், அவரது மகன் நீண்ட காலத்துக்கு சிறைக்கு செல்லக்கூடும் என்று அதிகாலை 3.30 மணிக்கு சொல்ல சொல்வதன் நோக்கம் என்ன? ஏற்கெனவே பாட்டியை இழந்த துயரத்தில் இருக்கும் எனது குடும்பத்துக்கு மேலும் எவ்வளவு வேதனையை ஏற்படுத்த விரும்பினீர்கள்?" என்று தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    முன்னதாக டெல்லி காவல்துறை துணை ஆணையர் நேஹா யாதவ் இது தொடர்பாக விளக்கமளித்திருந்தார். அதில் தீப்கேவின் பாட்டி உயிரிழந்த தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் அவரை அணுகி செய்தியைத் தெரிவித்ததாக கூறியுள்ளார். குடும்பத்தினரிடம் பேசுவது, விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்வது உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்க முன்வந்ததாகவும், பெற்றோரிடம் பேச விரும்புகிறாரா என்று பலமுறை கேட்டபோதும் அவர் மறுத்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மகாராஷ்டிராவில் பாட்டி உயிரிழப்பு

    தீப்கேவின் தந்தைவழி பாட்டியான சவித்ரிபாய் சங்கர்ராவ் தீப்கே, மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டம் சந்துக் பிம்ப்ரி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு வயது 85. நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், வயது தொடர்பான பிரச்சினைகளாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    English Summary

    Cockroach Janata Party coordinator Abhijeet Dipke has rejected Delhi Police’s claim that he was offered help to contact his family(கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்): Abhijeet Dipke latest news in tamil.