என்னால் ஒருநாள் கூட சிறையில் இருக்க முடியாது.. சவ்ரவ் தாஸ் சொன்ன வார்த்தை.. அபிஜித் தீப்கே வீடியோ

  • டெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களான சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் என்னால் ஒருநாள் கூட சிறையில் இருக்க முடியாது என்று சவ்ரவ் தாஸ் கூறியதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கூறியுள்ளார்.

    Advertisement

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களான சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே மட்டும் வெளியே ஜாமீனில் இருக்கிறார். இந்நிலையில் தான் இன்று அபிஜித் தீப்கே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    '' நான் சவ்ரவ்வின் அம்மாவிடம் பேசினேன். அவருக்கு நான் தைரியம் சொல்ல வேண்டும். ஆனால் அவரே என்னிடம் 'மகனே, கவலைப்படாதே. ஒட்டுமொத்த குழுவினரையும் பாதுகாப்பாக இருக்க சொல். சவ்ரவ் ஒரு போராளி. நிச்சயம் மீண்டும் வருவான்' என்று கூறினார்.

    சவ்ரவ் உண்மையிலேயே நலமாக தான் இருக்கிறான். 5 அல்லது 6 நாள் சிறையில் இருந்துவிட்டு நேற்று அவன் மகிழ்ச்சியுடன் வெளியே வந்ததை பார்த்தபோது அவனை யாராலும், எந்த சூழ்நிலையிலும் உடைக்க முடியாது என்று தோன்றியது.

    Advertisement

    ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோது நாங்கள் சிறைக்கு சென்றால் யார் எத்தனை நாட்கள் தாக்குப்பிடிப்போம்? என்று வேடிக்கையாக பேசிக்கொள்வோம். சவ்ரவ்விடம் இதுபற்றி கேட்டபோது, ''அவன் ஒருநாள் கூட தாங்கமாட்டேன்' என்று கூறினார்.

    ஆனால் அவன் இன்று 6 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு முகம் முழுக்க புன்னகையுடன் வெளியே வருகிறான். அவனுக்குள் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்று தெரியவில்லை. சவ்ரவ் 'கோல்ட் காபி' (cold coffee) குடிப்பதை வைத்து மக்கள் அவனை எப்படி கேலி செய்தார்கள் என்பது நினைவிருக்கிறதா?.

    'இவன் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவன். இவனால் சாதிக்க முடியாது; போராட்டத்தின் போது கூட 'ஸ்டார்பக்ஸ்' காபியும், கோல்ட் காபியும் குடிக்கிறான்' என்று ஏளனம் செய்தார்கள். ஆனால் சவ்ரவ் தாஸ் இன்று சிறையில் இருந்தபடியே போராடி கொண்டிருக்கிறான். அவன் மிகவும் மென்மையானவன் என்றும் போராட்ட குணம் இல்லாதவன் என்றும் ஒதுக்கி வைத்தவர்கள் இப்போது அவனை பார்க்கட்டும்.

    Advertisement

    இந்த இயக்கத்தை உண்மையில் முன்னெடுத்து சென்றவர்கள் சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா தான் என்று நான் மனதார சொல்கிறேன். ஏனென்றால் அவர்கள் உண்மையிலேயே முக்கிய பங்காற்றினர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றியது மட்டுமே என்னுடைய வேலை. அசுதோஷ் ரங்கா மற்றும் சவ்ரவ் தாஸ் காட்டிய வழியில் செல்வதுதான் எனது பணியாக இருந்தது.

    வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நான் தலைவராக தோன்றலாம். ஆனால் உண்மையில் நான் தலைவன் அல்ல. சவ்ரவ்வும், அசுதோஷ் ரங்காவும் தான் தலைவர்கள். 'நாளை நீ இங்கே செல்ல வேண்டும், இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும்' என்று அவர்கள் என்னிடம் கூறுவார்கள். நானும் அதற்கு அமைதியாகச் சம்மதிப்பேன். ஏனென்றால், அவர்களின் திறமையும் முடிவெடுக்கும் தன்மையும் என்னை விட பல மடங்கு சிறந்தது என்பது எனக்கு நன்றாக தெரியும்.

    Advertisement

    அதேபோல் அசுதோஷ் ரங்காவின் அம்மாவிடமும் பேசினேன். அசுதோஷ் சிறையில் இருந்தபோது அவரது Uncle காலமானார். அவரது இறுதி சடங்கில் கூட அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. தற்போது அவரது தாயார் குடும்பத்தினருடன் இருக்கிறார். நான் அவர்களை சந்திக்க விரும்பினேன், ஆனால் வீட்டில் துக்க நிகழ்வு நடந்திருப்பதால் இப்போது வர வேண்டாம் என்று அவரது தாயார் கேட்டுக்கொண்டார்.

    இருப்பினும் 'அசுதோஷ் ரங்காவை பற்றி கவலைப்பட வேண்டாம். எது வந்தாலும் நாம் அதனை பார்த்து கொள்ளலாம்' என்றார். அவன் சரியான விஷயத்திற்காக போராடி கொண்டிருக்கிறான் என்று அவனது தாயும், தந்தையும் அவனக்கு உறுதுணையாக நிற்கிறார்கள்.

    Advertisement

    தற்போது பலவீனமாகவோ அல்லது மனச்சோர்வை உணருமவோருக்கு நான் சொல்வது ஒன்று மட்டுமே. யாரும் பலவீனமாக உணர வேண்டாம். சவ்ரவ், அசுதோஷ் ஆகியோரின் குடும்பத்தினர் இந்த சூழலை நேரடியாக எதிர்கொள்கிறார்கள். அவர்களுடன் பேசிய பிறகு, அவர்கள் துளியும் பலவீனமாக இல்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

    இந்த நேரத்தில், எனக்கு இருவரின் குடும்பத்தினரிடம் இருந்து மனவலிமை கிடைக்கிறது. மனதளவில் உடைந்து போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்களே, இன்று மிகவும் உறுதியுடன் நிமிர்ந்து நிற்கிறார்கள். சொல்லப்போனால், அவர்கள்தான் எனக்கு ஊக்கத்தையும் வலிமையையும் அளிக்கிறார்கள்.

    சவ்ரவ், அசுதோஷ் ரங்கா சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் நாம் பயந்துவிடப் போவதில்லை. நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம். நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? நாங்கள் சரியானதொரு விஷயத்திற்காகப் போராடுகிறோம். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை'' என்றார்.

    English Summary

    Saurav Das and Ashutosh Ranga, co-convenors of the Cockroach People's Party, have been lodged in Delhi's Tihar Jail. Abhijeet Dipke, the founder of the party, stated that Saurav Das had remarked that he could not endure even a single day in prison.