டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், ஜந்தர் மந்தரில் நடைபெறவிருந்த போராட்டத்தை வழிநடத்தும் பொறுப்பு அஜின்க்யா ஷிண்டேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.
இன்றைய தினம் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் டெல்லியில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த கரப்பான் பூச்சி கட்சி தலைவர்கள் இன்று காலை விமானம் மூலம் டெல்லி வந்திறங்கினர். அப்போது விமானத்தில் வைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அபிஜித் தீப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகிய மூவரையும் டெல்லி போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து கட்சியின் அமைப்பு பொறுப்பாளரான அஜின்க்யா ஷிண்டே போராட்டத்துக்கு தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, அக்டோபர் 10ஆம் தேதி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த கரப்பான் பூச்சி கட்சி திட்டமிட்டிருந்தது. தாம் கைது செய்யப்படலாம் என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்த அபிஜித் தீப்கே, வெள்ளிக்கிழமை இரவே ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவை கரப்பான் பூச்சி கட்சி இப்போது கைது நடவடிக்கைக்கு பிறகு வெளியிட்டுள்ளது. அதில், "நான், சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்படலாம். நாங்கள் வெளியே வரும்வரை கட்சியின் அமைப்பு பொறுப்பாளர் அஜின்க்யா ஷிண்டே ஜந்தர் மந்தர் போராட்டத்தை வழிநடத்துவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு செல்லும்போது கைது செய்யப்பட்டாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தீப்கே ஏற்கெனவே கூறியிருந்தார். போராட்டத்தில் மக்கள் பங்கேற்பதைத் தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே போராட்டத்துக்கு முன்னதாக டெல்லியில் குறைந்தது 1,500 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. நகரின் பல பகுதிகளில் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டது. முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போலீசார் நிறுத்தப்பட்டு, வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. கனாட் பிளேஸ், மண்டி ஹவுஸ், ஜந்தர் மந்தர், படேல் சௌக் உள்ளிட்ட மத்திய டெல்லியின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று டெல்லி போக்குவரத்து போலீசார் எச்சரித்தனர். அசோகா சாலை - ஜந்தர் மந்தர் சாலை சந்திப்பு, டால்ஸ்டாய் மார்க் - ஜன்பத் சந்திப்பு, ஜெய் சிங் சாலை - சன்சத் மார்க் சந்திப்பு, ரயில் பவன் சந்திப்பு, படேல் சௌக், கோல் டாக் கானா, வின்ட்சர் பிளேஸ் உள்ளிட்ட இடங்களிலும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் போடப்பட்டன. கரப்பான் பூச்சி கட்சியினர் அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை எனவும் மாறாக தகவல் அனுப்புவது போலவே அனுப்பியிருந்தாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கான விண்ணப்பத்தைக் குறைந்தது 10 நாட்களுக்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் போலீசார் கருத்தாக உள்ளது. மேலும், கடந்த காலங்களில் கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில் நிபந்தனைகள் மீறப்பட்டதாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் சில போராட்டங்கள் தொடர்ந்ததாகவும் போலீசார் காரணம் தெரிவித்துள்ளனர்.கரப்பான் பூச்சி கட்சி தலைவர்கள்
வீடியோ
அனுமதி மறுப்பு
டெல்லி போலீஸ்