CJP Protest: என்னை கைது செய்ய போறாங்க.. போராட்டத்தை நிறுத்திடாதீங்க.. ஆப்ஜித் தீப்கே திடீர் வீடியோ

  • டெல்லி: நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இன்று மாலையில் இருந்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் போது, தன்னை போலீசார் கைது செய்ய உள்ளதாக கூறி ஆப்ஜித் தீப்கே வெளியிட்ட வீடியோ திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    நீட் தேர்வு முறைகேடு, சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடி ஆகியவற்றிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவர் ஆப்ஜித் தீப்கே தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    Advertisement

    டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்

    ஏற்கனவே கடந்த வாரம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் அதே மைதானத்தில் போராட்டம் நடைபெற்றது. இன்று மாலை 5 மணி வரை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில், போராட்டத்தை முடித்துக்கொள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மறுத்தனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்திற்கு வரும் வழியில் தடுப்புகளை அமைத்த போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    தன்னை கைது செய்யப் போவதாக ஆப்ஜித் வீடியோ

    போராட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி நேரத்தை நீட்டிக்க முடியாது என்று திட்டவட்டமாக போலீசார் கூறினர். ஆனால், ஆப்ஜித் தீப்கே போராட்டம் தொடரும் என்று அறிவித்து அங்கிருந்து வெளியேற மறுத்தனர். தொடர்ந்து அங்கு மின் விளக்குகளை போலீசார் அணைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், மொபைல் போன் வெளிச்சத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    Advertisement

    அதேபோல், போராட்டம் நடைபெறும் இடத்திற்கு தண்ணீர் மற்றும், உணவு பொருட்களை அனுமதிக்க போலீஸ் மறுப்பதாக ஆப்ஜித் தீப்கே குற்றம் சாட்டினர். இதற்கிடையே, போலீசார் தன்னை கைது செய்ய இருப்பதாகவும் வீடியோ ஒன்றை ஆப்ஜித் தீப்கே வெளியிட்டார். ஆப்ஜித் தீப்கே கூறுகையில், "என்னை போலீசார் கைது செய்ய இருக்கிறார்கள். நான் கைது செய்யப்பட்டாலும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த அமைதியான போராட்டத்தை யாரும் நிறுத்த வேண்டாம்" என்று கூறினார்.

    நாங்களும் உண்ணாவிரதம் இருப்போம்

    மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் நடைபெறும் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்திரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை தொடர்வதால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. ஜந்தர் மந்தரில் மீண்டும் மின் விளக்குகள் எரிய தொடங்கியது. இதையடுத்து போலீசாருக்கு ஆப்ஜித் தீப்கே நன்றி தெரிவித்தார்.

    Advertisement

    அதேநேரத்தில் உணவு கொண்டு செல்ல போலீசார் அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் ஆப்ஜித் தீப்கே, மகாத்மா காந்தியும் உண்ணாவிரதம் இருந்தார். அதுபோல நாங்களும் உண்ணாவிரதம் இருப்போம். ஆனால் வரலாறு எழுதப்படும் போது, நீங்கள் ஜெனரல் டயருடன் ஒப்பிடப்படுவீர்கள்" என்று ஆவேசமாக பேசினார். மேலும், போராட்டக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஜந்தர் மந்தர் பகுதிக்குள் குடிநீர் மற்றும் உணவு கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று டெல்லி போலீசாருக்கு மீண்டும் கோரிக்கை விடுத்தார்.

    English Summary

    Abhijit Deepke claimed Delhi Police were preparing to arrest him during a protest demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan over alleged irregularities in NEET and CBSE examinations. He urged supporters to continue the peaceful agitation even if he was taken into custody.