அகமதாபாத்: அதானி குழுமத்தின் ஒரு அங்கமான 'அதானி சோலார்' (Adani Solar) நிறுவனம், உலகளாவிய சூரிய சக்தி (PV Module) உற்பத்தியாளர்கள் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. 2026-ஆம் ஆண்டிற்கான கணிப்புகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சர்வதேசப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த ஒரே ஒரு இந்திய நிறுவனம் அதானி சோலார் மட்டுமே ஆகும். கடந்த முறை இதே பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த அதானி சோலார், இந்த ஆண்டு 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
வுட் மெக்கன்சி நிறுவனம் அதானி சோலாருக்கு 'கிரேடு ஏ' தகுதியை வழங்கியுள்ளது. உற்பத்தித் திறன், தொழில்நுட்ப முதிர்ச்சி, நிதி ஆரோக்கியம் மற்றும் விநியோகச் சங்கிலி உறுதித்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உயரிய தகுதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவெனில், உலகளாவிய சோலார் உற்பத்தியில் வழக்கம் போல சீன நிறுவனங்கள் தங்களின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளன. இந்தப் பட்டியலில் முதல் 5 இடங்களையும் சீன நிறுவனங்களே பிடித்துள்ளன. 'லோங்கி கிரீன் எனர்ஜி' நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஜின்கோ சோலார், ஜேஏ சோலார் மற்றும் ட்ரினா சோலார் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா, தென் கொரியா (Qcells - 10வது இடம்) மற்றும் சிங்கப்பூர் (ELITE Solar - 8வது இடம்) போன்ற நாடுகள் சோலார் உற்பத்தியில் மிக முக்கிய உலகளாவிய விநியோகஸ்தர்களாக உருவெடுத்து வருவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் அதானி சோலார், மற்ற நிறுவனங்களைப் போல சோலாரின் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் தயாரிக்காமல், ஆரம்பக் கட்டப் பொருட்களிலிருந்து இறுதி மாடுயூல் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் தயாரிக்கும் முழுமையான ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது: தற்போது 2 ஜிகாவாட் இங்காட் மற்றும் வேஃபர் திறனையும், தலா 4 ஜிகாவாட் சோலார் செல் மற்றும் மாடுயூல் உற்பத்தித் திறனையும் கொண்டு இயங்குகிறது. குஜராத்தின் முந்த்ராவில் உள்ள தனது மாபெரும் ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலையின் ஆண்டுத் திறனை 10 ஜிகாவாட் ஆக உயர்த்தும் இறுதிக்கட்டப் பணிகளில் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியா வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கக் கொண்டுவந்த பிஎல்ஐ (PLI - Production Linked Incentive) திட்டங்கள் மற்றும் இறக்குமதி வரிகள் காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த சோலார் உற்பத்தித் திறன் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது. கடந்தை 2014ல் இந்தியாவின் சோலார் மாடுயூல் உற்பத்தித் திறன் வெறும் 2.5 ஜிகாவாட் ஆக மட்டுமே இருந்தது. இது தற்போது 170 ஜிகாவாட் (GW) என்ற பிரம்மாண்ட எல்லையைத் தாண்டியுள்ளது. அத்துடன் உள்நாட்டு சோலார் செல் உற்பத்தித் திறனும் 27 ஜிகாவாட் ஆக உயர்ந்துள்ளது.