E20ஐ விடுங்க.. அடுத்தது கலப்பு டீசலுக்கு ரெடியாகும் மத்திய அரசு! 15% கலக்கப்படும் ஐசோபியூட்டனால்!

  • டெல்லி: கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க E20 எனப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகத்திற்கு மத்திய அரசு ஓகே சொல்லியிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது, டீசலிலும் 15% வரை ஐசோபியூட்டனாலை கலக்க மத்திய அரசு ரெடியாகி வருகிறது.

    Advertisement

    ஏற்கெனவே எத்தனால் கலந்த இந்திய பெட்ரோலை வாங்க பூட்டான் மறுத்துவிட்டது. மட்டுமல்லாது எத்தனால் கலந்த பெட்ரோலுக்காக வடிவமைக்கப்படாத பழைய என்ஜின் கொண்ட வாகனங்களில் E20 பெட்ரோல் போடும்போது பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மக்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

    Advertisement

    இந்த நேரத்தில் டீசலில் ஐசோபியூட்டனால் கலக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    உயிரி எரிபொருள் (Biofuel) திட்டத்தின் அடுத்த கட்டமாக, டீசலில் 15 சதவீதம் வரை 'ஐசோபியூட்டனால்' (Isobutanol) கலப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த தூய்மையான எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.

    Advertisement

    பெட்ரோலில் எத்தனாலை நேரடியாகக் கலக்க முடியும், ஆனால் டீசலில் எத்தனாலை நேரடியாகக் கலக்க முடியாது. எனவே, எத்தனாலில் இருந்து ஐசோபியூட்டனாலைத் தயாரித்து, அதை டீசலுடன் கலப்பதற்கான தொழில்நுட்பத்தை அரசு உருவாக்கி வருகிறது. இந்த 15% கலப்புத் திட்டம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, தூய்மையான எரிபொருள் மாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று அமைச்சர் கட்கரி குறிப்பிட்டார்.

    இதற்கான முன்னோடித் திட்டங்கள் ஏற்கனவே ஊக்கமளிக்கும் முடிவுகளைத் தந்துள்ளன. 100% எத்தனால் மற்றும் ஐசோபியூட்டனாலில் இயங்கும் இரண்டு ஜெனரேட்டர்கள் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த எரிபொருட்களில் இயங்கும் வகையில் என்ஜின்களை வடிவமைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஐசோபியூட்டனால் அதிக ஆற்றல் அடர்த்தி கொண்டது மற்றும் சாதாரண டீசல் என்ஜின்களுடன் எளிதில் பொருந்தக்கூடியது. மேலும், இது வழக்கமான எரிபொருட்களை விட மிகக் குறைவான உமிழ்வையே வெளியிடுகிறது.

    பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் (E20) திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், டீசலில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த மாற்றம் இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பயன் அளிக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், வாகன ஓட்டிகள் இந்த விஷயத்தில் பெரிய அளவுக்கு திருப்தியடையவில்லை.

    English Summary

    E20: The Central Government had previously approved the distribution of E20—petrol blended with ethanol—to reduce crude oil imports. Now, the government is preparing to blend up to 15% isobutanol into diesel as well.