அதிமுக MLAக்கள் தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்ட விவகாரம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

  • டெல்லி: அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் தகுதி நீக்கத்தை சபாநாயகர் கைவிட்டதை எதிர்த்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தவெக அரசுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்த விவகாரத்தில் 21 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு மன்னிப்பு கடிதம் அளித்திருந்தனர்.

    Advertisement

    தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு, கடந்த மே 13 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக, 25 அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை கோரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

    Advertisement

    பின்னர் அதிமுகவின் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து, மீதமுள்ள 21 எம்எல்ஏ-க்கள் மன்னிப்புக் கோரி எடப்பாடி பழனிசாமியிடம் கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் கடிதம் அளித்தார்.

    இதை ஏற்று, 21 எம்எல்ஏ-க்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

    Advertisement

    அந்த உத்தரவை எதிர்த்து பி.வி.செல்வகுமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 'கட்சியை சாராத நீங்கள் எதற்காக இந்த வழக்கை தொடுத்திருக்கிறீர்கள்?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு மனுதாரர் தரப்பில், 'ஒரு வாக்காளராக நான் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவருக்கு வாக்களித்த நிலையில், அவர் கட்சி உத்தரவை மீறிய நடவடிக்கையில் ஈடுபடும்போது அதனை கேட்க உரிமை உள்ளது. மேலும், தகுதிநீக்க நடவடிக்கை தொடங்கிய பிறகு மன்னிப்புக் கடிதத்தை ஏற்று நடவடிக்கையை கைவிட முடியாது. இவ்வாறு கட்சி தாவல் தடை சட்டத்தை கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்க கூடாது' என தெரிவித்தார்.

    Advertisement

    இதை தொடர்ந்து நீதிபதிகள், 'சம்பந்தப்பட்ட நபர்கள் அதிமுகவின் தலைமைக்கு மன்னிப்பு கடிதம் எழுதி, அந்த கட்சியிலேயே தொடரும் நிலையில் இந்த விவகாரத்தில் கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் எதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை' எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இதற்கிடையே கட்சி மாறிய இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் செல்வகுமார் கடந்த ஜூன் மாதம் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்திருப்பதாகக் கூறி, நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.

    Advertisement

    மேலும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் இவர்கள் நால்வர் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கின் மூல மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்து, மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    English Summary

    Supreme Court has dismissed a writ petition that challenged the Speaker's decision to drop the disqualification proceedings against AIADMK MLAs.