வெறும் 5 நிமிட டர்புலன்ஸ்.. ஆனால் 17 பேர் படுகாயம்.. நடுவானில் நடந்தது என்ன? பகீர் தகவல்

  • டெல்லி: தாய்லாந்தின் புகெட்டில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென டர்புலன்ஸில் சிக்கிய நிலையில், அதில் 17 பேர் மோசமாக காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது மொத்தமே 4 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாகவும், அதற்குள் பலர் காயமடைந்ததாகவும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பொதுவாகவே மிகவும் பாதுகாப்பான ஒரு பொது போக்குவரத்து என்றால் அது விமான போக்குவரத்து தான். அதில் உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும் என்பதால் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இருப்பினும், விமான போக்குவரத்திலும் கூட சில மோசமான சம்பவங்கள் நடந்துவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

    Advertisement

    ஏர் இந்தியா

    தாய்லாந்தின் புகெட்டில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென டர்புலன்ஸில் சிக்கிய நிலையில், அதில் 17 பேர் மோசமாக காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் அவர்களை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    முதுகில் காயம்

    அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சுமார் 4 முதல் 5 நிமிடங்கள் கடுமையான டர்புலன்ஸில் விமானம் சிக்கியுள்ளது. இதனால் விமானத்தில் மிக கடுமையான அதிர்வு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தான் பலர் காயமடைந்தனர். விமானத்திற்குள் பதற்றமான சூழல் ஏற்பட்டது. சில விமான பணி பெண்களுக்கு கழுத்து மற்றும் முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன" என்றும் கூறினார்.

    Advertisement

    ஏர் இந்தியா விளக்கம்

    இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 பயணிகளும் தற்போது வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. அவர்கள் மேலும், "ஆகஸ்ட் 5 பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி, AI2379 விமானத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பயணிகளும் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், 4 கேபின் குழு உறுப்பினர்கள் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஏர் இந்தியா தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தாய்லாந்தின் புகெட்டில் இருந்து டெல்லி நோக்கி இயக்கப்பட்ட AI2379 என்ற ஏர் இந்தியா ஏர்பஸ் A320neo விமானத்தில் 137 பயணிகள் மற்றும் 8 விமான பணியாளர்கள் இருந்தனர். டெல்லி தரையிறங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு விமானம் கடுமையான டர்புலன்ஸில் சிக்கியது. இருப்பினும், விமானிகள் துரிதமாக செயல்பட்டதால் விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது.

    அமைச்சர் சொல்வது என்ன

    விமான நிலையத்தில் மருத்துவக் குழு தயார் நிலையில் இருந்ததாக அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார். முதற்கட்ட சிகிச்சை விமான நிலையத்திலேயே அளிக்கப்பட்ட நிலையில், கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். காயமடைந்த போதிலும் விமானம் தரையிறங்கும் வரை பயணிகளுக்கு சேவை செய்த கேபின் குழுவினரை அமைச்சர் ராம் மோகன் பாராட்டினார்.

    Advertisement

    அவர் மேலும், "நான்கு விமான பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நான் டிஜிசிஏ அதிகாரிகளுடன் சென்று சந்தித்தேன். 5 நிமிட டர்புலன்ஸில் அவர்கள் காயமடைந்தனர். இருப்பினும், விமானம் தரையிறங்க ஒரு மணி நேரம் இருந்த நிலையில், காயமடைந்த பிறகும் அவர்கள் தங்கள் கடைமையை செய்துள்ளனர். இது அவர்களின் துணிச்சலை காட்டுகிறது" என்று அமைச்சர் கூறினார்.

    விசாரணை

    இந்த சம்பவம் குறித்து தற்போது விமான போக்குவரத்து இயக்குநரகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விமானம் தரையிறங்கிய பிறகு அது தனியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. கருப்புப் பெட்டிகள் டிஜிசிஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில் பதிவான விஷயங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். விசாரணை முடிவடைந்த பிறகு அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

    English Summary

    Civil Aviation Minister Ram Mohan Naidu said the severe turbulence on Air India's Phuket-Delhi flight lasted only 4–5 minutes(ஏர் இந்தியா விமானத்தில் எதிர்பாராத டர்புலன்ஸ்): Air India Turbulence latest news in tamil.