டெல்லி: விமான கட்டணங்கள் 700 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறி, அதை கட்டுப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் மறுத்துவிட்டனர். விமான டிக்கெட் அதிகம் என்ற முறையிட்ட போது, அப்போது விமானத்தில் பயணம் செய்யாதீர்கள் என்று நீதிபதி விக்ரம் நாத் வழக்கை முடித்து வைத்தார்.
இந்தியாவில் விமான சேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை, அதிலும் உள்நாட்டிலேயே விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தும் விமான நிறுவனங்கள் பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் பல மடங்கு அதிக விலைக்கு டிக்கெட்களை நிர்ணயம் செய்கிறார்கள்.
இதற்கிடையே நாட்டில் விமான பயண கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் இந்த விவகாரத்தை முறையிட்டார். சில ரூட்களில் விமான டிக்கெட் கட்டணங்கள் 700 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், விமான போக்குவரத்து என்பது அத்தியாவசிய சேவையாக கருதப்பட வேண்டும் என்றும் வாதிட்டார். கட்டண உயர்வு அரசியலமைப்பு சட்டத்தின் 14வது பிரிவை மீறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும், "விமான கட்டணங்கள் 700 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இது அத்தியாவசிய சேவை. இது சட்டப்பிரிவு 14ஐ மீறும் செயல்" என்று நீதிபதிகளிடம் முறையிட்டார். மேலும், தனது முறையீடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், நீதிபதிகள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள மறுத்துவிட்டனர். வழக்கறிஞர் முறையிட்டபோது நீதிபதி விக்ரம் நாத், "அப்போது விமானத்தில் பயணம் செய்யாதீர்கள். அடுத்த வழக்கை பார்க்கலாம்" என்று கூறி வழக்கை முடித்து வைத்தார். இதையடுத்து அந்த விவகாரம் அப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. நீதிபதிகள் அடுத்தடுத்த வழக்குகளை விசாரிக்க ஆரம்பித்ததால், விமானக் கட்டண உயர்வு தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதற்கிடையே இந்தியாவில் விமான கட்டணங்களை நிர்ணயிப்பதற்கான புதிய நடைமுறை 2027 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. பாரதிய வாயுயான் நியமம், 2026 என்ற புதிய விதிகளின்படி இவை உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி விமான டிக்கெட் கட்டணங்களை பெரும்பாலும் மார்கெட் நிலவரத்தின் அடிப்படையிலேயே விமான நிறுவனங்கள் நிர்ணயிக்க அனுமதிக்கப்படும். புதிய விதிகளின்படி, விமான கட்டணங்களை அரசு நேரடியாக கட்டுப்படுத்தாது. அதேநேரத்தில், அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி தலையீடு அவசியம் என அரசு கருதினால், கட்டண நிர்ணயத்தில் தலையிட அதிகாரம் இருக்கும். இதன் மூலம் இப்போது போலவே விமான நிறுவனங்கள் மார்கெட் தேவைக்கு ஏற்ப தங்கள் விமான டிக்கெட்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம். முன்னதாக தொடர் விடுமுறை நாட்களில் விமான டிக்கெட் உச்சத்திற்கு பறக்கும் நிலையில், அனைத்து ரூட்களுக்கும் மத்திய அரசு உச்சவரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும், புதிய கொள்கையின் கீழ் விமான கட்டணங்களுக்கு உச்சவரம்பு விதிக்க அரசு திட்டமிடவில்லை. இருப்பினும், குறிப்பிட்ட வழித்தடங்களில் தேவை திடீரென அதிகரித்து, கட்டணங்கள் வழக்கத்திற்கு மாறாகக் கடுமையாக உயரும்போது மட்டும் அரசு தலையிடும். அந்த அதிகாரம் மட்டும் அரசுக்கு இருக்கும்.முறையீடு
விசாரிக்க மறுப்பு
புதிய விதிமுறைகள்
உச்சவரம்பு இல்லை