டெல்லி: டெல்லி யூனிவர்சிட்டி மாணவர் சங்க தேர்தலில் தலைவர், செயலாளர், துணை செயலாளர் பதவிகளை ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் கைப்பற்றினர். காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் அனைத்து பதவிகளிலும் தோல்வியடைந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏபிவிபி அமைப்பினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் நேரடி போட்டி என்பது ஏபிவிபி மற்றும் என்எஸ்யூஐ அமைப்புகளுக்கு இடையே தான் இருந்தது. இதில் ஏபிவிபி என்பது பாஜகவிற்கு மிகவும் நெருக்கமான அமைப்பாகும். அதாவது பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவாக ஏபிவிபி செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் என்எஸ்யூஐ என்பது காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவாகும். இந்நிலையில் தான் டெல்லி யூனிவர்சிட்டி மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தலைவர், செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். அதேவேளையில் துணை தலைவர் பதவியை சுயேச்சை வேட்பாளர் கைப்பற்றினார். இதன்மூலம் டெல்லி யூனிவர்சிட்டி தேர்தலில் ஏபிவிபி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''இந்த தேர்தல் முடிவானது, 'முதலில் தேசம் தான்' (Nation First) என்ற கொள்கை மற்றும் மாணவர் நலனுக்கான அர்ப்பணிப்பு மீது இளைஞர்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபி அமைப்பு பெற்ற சிறப்பான வெற்றிக்கு அந்த அமைப்பின் அர்ப்பணிப்பு மிக்க தொண்டர்களின் உழைப்பு தான் காரணம். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை முன்னிறுத்தி மாணவர் நலன் மற்றும் நாட்டின் கட்டமைப்பிற்காக தொடர்ந்து பணியாற்ற இந்த வெற்றி ஏபிவிபி (ABVP) தொண்டர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்'' என்று கூறியுள்ளார்.