டெல்லியில் மாணவர் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஏன்? நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா

  • டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டம் மற்றும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க உள்ளார். மத்திய அரசு இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என சொல்லி, நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    Advertisement

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கை குறித்து அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்றம் தொடங்கியது முதலே எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு, அவையை முடக்கி வருகிறார்கள்.

    Advertisement

    அவையில் விளக்கமளிப்பார்

    இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மாணவர்கள் தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்தும் விரிவான விவாதத்துக்கு அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "மாணவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்போம். உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிப்பார்" என்றார். அதேநேரம் விவாதம் நடைபெறும் போது எதிர்க்கட்சிகள் இடையூறு செய்யாமல், உள்துறை அமைச்சரின் பதிலை கேட்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    Advertisement

    எதற்காக இந்த போராட்டம்?

    ஜூன் 20ஆம் தேதி டெல்லியில் கரப்பான் பூச்சி அமைப்பின் சார்பில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் அவர்கள் மீது தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தாக கூறப்படுகிறது. போலீசார் தேவையில்லாமல் அதிக நடவடிக்கைகளை எடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    மேலும், போராட்டக்காரர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த நடவடிக்கை அமித் ஷாவின் உத்தரவின் பேரில் நடைபெற்றதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    Advertisement

    தொடர் போராட்டம்

    இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமித் ஷாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் அவைகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயில்களிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தினசரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் சில மசோதாக்கள் விவாதம் இல்லாமலும் நிறைவேறியுள்ளன.

    காங்கிரஸ்

    இதற்கிடையே மாணவர்கள் மீதான நடவடிக்கை குறித்து அமித் ஷா அவையில் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் கடிதம் எழுதி வலியுறுத்தினார். டெல்லியில் போராடிய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்ததாகவும், பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். டெல்லி போலீஸ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவதால், இந்த நடவடிக்கைக்கு இறுதி பொறுப்பு உள்துறை அமைச்சரையே சாரும் என்றும் வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    உத்தரவு

    மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைய இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பெண்கள் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை, FCRA உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் இந்தியா கூட்டணி கட்சிகளும் தங்களது எம்.பி.க்கள் மூன்று நாட்களும் அவையில் இருப்பதை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

    English Summary

    Home Minister Amit Shah is set to address Parliament on the police action against students protesting at Delhi's Jantar Mantar: டெல்லி மாணவர் போராட்டம் குறித்து அமித் ஷா முக்கிய விளக்கம்