அந்தமான் கடலில் எரிவாயு புதையல்.. சரியான நேரத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்!

  • டெல்லி: அந்தமான் கடல் பகுதியில் மிகப்பெரிய இயற்கை வளம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. சமுத்ர மந்தன் திட்டத்தின் கீழ் கடல் பகுதியில் ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2 கிணற்றில் எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வளமாக பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் உள்நாட்டு எரிவாயு உற்பத்தியை ஒரே அடியாக 30 சதவீதம் வரை உயர்த்தும் என நம்பப்படுகிறது.

    Advertisement

    உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, மிகப்பெரிய ஆற்றல் நுகர்வு நாடுகளில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் 3 வது பெரிய நாடாக ஆற்றல் நுகர்வில் இந்தியா உள்ளது.

    Advertisement

    இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு பெருமளவு இறக்குமதியையே நம்பியுள்ளது. சரியாக சொல்வது என்றால், கச்சா எண்ணெயில் 88.5 சதவீதம் மற்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் கேஸ் வாகனங்களுக்கான சி.என்.ஜி. மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் எரிவாயுவில் சுமார் 50 சதவீதம் வெளிநாட்டு இறக்குமதியையே நம்பியிருக்கிறது. இதற்காக ஆண்டுக்கு 12.5 லட்சம் கோடி ரூபாய் இந்தியா செலவு செய்கிறது.

    Photo Credit:

    அந்தமானில் மிகப்பெரிய எண்ணெய் வளம்

    இது ஒருப்பக்கம் என்றால் எரிபொருள் தேவையில் இறக்குமதியை சார்ந்து இருப்பதால் மத்திய கிழக்கில் சிறிய துரும்பு அசைந்தாலும் கூட இந்தியாவின் மூலை முடுக்குகள் வரை பாதிப்பு எதிரொலிக்கும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில்தான், அந்தமான் கடல் பகுதியில் மிகப்பெரிய இயற்கை வளம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் ஆழ்கடல் ஆய்வு திட்டமான சமுத்ர மந்தன் திட்டத்தின் கீழ் இந்த மிகப்பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    Advertisement

    சமுத்ர மந்தன் திட்டத்தின் கீழ் கடல் பகுதியில் ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் உள்ள ஸ்ரீ விஜயாபுரம்- 3 என்ற கிணற்றில் துளையிட்டு இந்த எண்ணெய் புதையலை கண்டுபிடித்து உள்ளது. சர்வதேச அளவில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய எண்ணெய் வளம் கயானாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு இணையான கண்டுபிடிப்பாக இந்த எண்ணெய் வயல் பார்க்கப்படுகிறது.

    3 கிணறுகளில் 2-ல் எரிவாயு கண்டுபிடிப்பு

    அந்தமான் கடலில் சுமார் 355 மீட்டர் அழமுள்ள கடல் பகுதியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கடல் மட்டத்தின் அடியில் மேலும் 1,900 மீட்டருக்கு ஆழத்தில் ராட்சத இயந்திரங்களின் மூலம் துளையிட்டு ஆய்வு செய்ததில், இந்த எரிவாயு புதையல் சிக்கியுள்ளது. இதுவரை தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2 கிணற்றில் எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வளமாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஆழமான கடல்பகுதி என்பதால், இங்கிருந்து எரிபொருளை வெளியில் எடுக்க பெரிய சவால்கள் உள்ளன. அங்குள்ள சிதோஷ்ண நிலை ஒருபக்கம், இன்னொரு பக்கம், ஆழ்கடலில் பாறைகளை துளைக்க வேண்டும். இதற்கான தொழில் நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்பதால், இந்திய அரசு 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த எரிவாயு கிணற்றில் இருந்து வணிக ரீதியில் உற்பத்தி தொடங்கினால், குறைந்தது 30 முதல் 40 ஆண்டுகள் வரை தடையின்றி தொடர்ந்து எரிபொருளை எடுக்க முடியுமாம்.

    எரிவாயு உற்பத்தியை 30 சதவீதம் வரை உயர்த்தும்

    இந்த எரிவாயு புதையலினால் இந்தியாவுக்கு பல நன்மைகள் கிடைக்க உள்ளன. இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் பணத்தில் ரூ.50 ஆயிரம் கோடி துவக்கத்திலேயே அதிகரிக்கும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. உள்நாட்டில் எரிவாயு கிடைக்கும் என்பதால், சி.என்.ஜி, எரிபொருள் விலை குறையும். உரங்கள் உற்பத்திக்கு இயற்கை எரிவாயுதான் முக்கிய பொருள் என்பதால், உரங்கள் விலையும் குறையும். இது இந்திய விவசாயிகளுக்கு நேரடியாக பலன் கொடுக்கும்.

    Advertisement

    எரிவாயு சுத்திகரிப்பு நிலையங்களால் வேலை வாய்ப்பு கிடைக்கும். அந்தமானில் இன்னும் சில புதிய கிணறுகள் அமைத்து எரிவாயு தேடினால் அதன் அளவும் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு எரிவாயு உற்பத்தியை ஒரே அடியாக 30 சதவீதம் வரை உயர்த்தும் ஆற்றல் கொண்டதாக இது பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    English Summary

    Andaman Sea: A major natural gas reserve has reportedly been discovered in the Andaman Sea under the Samudra Manthan project. Gas has been found in two of three wells drilled so far, and experts believe it could increase India's domestic gas production significantly.