ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான்

  • டெல்லி: தமிழ்நாட்டில் தனிக் கட்சி ஆரம்பிக்க முடிவு செய்துள்ள அண்ணாமலை, இது தொடர்பாக டெல்லி பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து தனது முடிவைத் தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்த பாஜக தலைமை ராஜ்யசபா சீட் தரக்கூட முன்வந்ததாகவும் இருப்பினும் அதை ஏற்க அண்ணாமலை மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வந்த மாஜி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.. இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே இவருக்கும் பாஜக தலைமைக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் இவர் புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. கடந்த சில நாட்களாக இதை ஊர்ஜிதப்படுத்தும் தகவல்களே தொடர்ந்து வந்தன..

    Advertisement

    டெல்லி பயணம்

    நேற்றைய தினம் அண்ணாமலை திடீரென டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் விமான நிலையம் சென்ற காரில் பாஜக கொடி இல்லை. மேலும், புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்வியையும் அவர் மறுக்கவில்லை. இதற்கிடையே தற்போது தேசியத் தலைமையுடன் சுமுகமாகப் பிரிந்து செல்ல விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் 5 பக்க விலகல் கடிதத்தையும் கொடுத்திருக்கிறார். அண்ணாமலையின் இந்த முடிவு தமிழக பாஜகவில் தற்போதைய சூழலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    என்ன நடந்தது

    டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து அண்ணாமலை பேசியிருந்த நிலையில், கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது பாஜகவின் தேசியத் தலைமையுடன் தனக்கு எந்தக் கசப்பும் இல்லை என்பதையும், அதே சமயம் தனது அரசியல் பாதையைத் தனியாக வகுக்க விரும்புவதையும் அண்ணாமலை மிகத் தெளிவாகக் கூறிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாகவே அண்ணாமலைக்கும் தமிழகத்தின் சில முக்கியக் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

    Advertisement

    ராஜ்யசபா சீட்

    இருப்பினும், அண்ணாமலையை எப்படியாவது சமாதானப்படுத்தி கட்சியிலேயே இருக்க வைக்க பாஜக மேலிடம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க முன்வந்ததாகவும், ஆனால் அண்ணாமலை அதனைத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பதவிகளை விடத் தனது அரசியல் பயணமே முக்கியம் என அவர் கருதுவதே இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

    முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பாஜகவில் நீடிப்பதன் மூலம் நீண்ட கால அரசியல் எதிர்காலத்தை உருவாக்குவதில் சில சிக்கல்களை உணர்வதாகத் தெரிகிறது. கட்சியின் தேசியக் கொள்கைகளுக்கும், தமிழகத்தின் பிராந்திய அரசியல் யதார்த்தங்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதில் அவர் சவால்களைச் சந்தித்து வந்ததும் இந்த விலகல் முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    Advertisement

    மக்கள் இயக்கம்

    அண்ணாமலை தற்போது நேரடியாக ஒரு அரசியல் கட்சியைத் தொடங்குவதற்குப் பதிலாக, முதலில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே அவர் நடத்தி வரும் 'வி த லீடர்ஸ்' (We The Leaders) என்ற தன்னார்வ அறக்கட்டளையை இதற்கான அடித்தளமாகப் பயன்படுத்த அவர் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களைப் பெரிய அளவில் ஒன்றிணைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    இந்த இயக்கம் முதலில் ஒரு வலுவான தன்னார்வலர்கள் நெட்வொர்க்கை உருவாக்கும். பின்னர் சரியான நேரத்தில் இது முழுநேர அரசியல் கட்சியாக மாற்றப்படும் என அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு சமூக மற்றும் தொழில்முறை பின்புலம் கொண்ட நபர்களைத் தனது இயக்கத்தில் இணைப்பதன் மூலம் ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்க அவர் முழுவீச்சில் தயாராகி வருகிறார்.

    English Summary

    Former Tamil Nadu BJP President Annamalai met national leader Nitin Nabin in Delhi to communicate his exit(புதிய கட்சியை தொடங்கும் அண்ணாமலை): Annamalai new party latest news in tamil.