அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • சென்னை: தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டுள்ளார். இதன்மூலம் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்திலும் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக மேலிடம் இன்று வெளியிட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சி மேலிடம் மீது அதிருப்தியில் இருந்து வந்தார். அதிமுகவுடன் கூட்டணியை அவர் விரும்பாத நிலையில் சட்டசபை தேர்தலில் பாஜக கேட்கவில்லை.

    Advertisement

    அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அதோடு பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை கடந்த ஆண்டு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரனுக்கு பாஜக மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் மொத்தம் 28 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டு ஊட்டியில் மட்டும் வென்றது. இதனால் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக முடிவு செய்தார். கடந்த 1ம் தேதி டெல்லி சென்ற அண்ணாமலை நேற்று வரை அங்கு இருந்தார்.

    இந்த சமயத்தில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) பிஎல் சந்தோஷ், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு நிதின் நபினிடம் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை வழங்கினார். இதையடுத்து அண்ணாமலையை சமாதானப்படுத்த மேலிட தலைவர்கள் முயன்றனர். ஆனால் அண்ணாமலை ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

    Advertisement

    இதற்கிடையே தான் இன்று மதியம் 12 மணிக்கு அண்ணாமலை தனது சமூக வலைதளம் வழியாக நேரலையில் உரையாற்ற உள்ளதாக அறிவித்தார். இந்த சமயத்தில்அவர் பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி அல்லது புதிய இயக்கம் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தான் அண்ணாமலையின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக பாஜக மேலிடம் இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் (தலைமை அலுவலகம் பொறுப்பாளர்) அருண் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ''தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறி வழங்கிய கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதன்மூலம் அண்ணாமலை பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி உள்ளார். இனி அவருக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பு இருக்காது. மேலும் இன்று மதியம் 12 மணிக்கு அண்ணாமலை தனது அடுக்கட்ட அரசியல் நகர்வு பற்றி அறிவிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அவர் புதிய இயக்கத்தை தொடங்குகிறாரா? அல்லது புதிய கட்சியை தொடங்குகிறாரா? என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

    English Summary

    BJP National President Nitin Nabin has accepted the resignation letter of former Tamil Nadu BJP President Annamalai.