10 ஆண்டு சிறை + ரூ.1 கோடி வரை அபராதம்.. வினாத்தாள் கசிவை தடுக்கும் மசோதா லோக்சபாவில் நிறைவேறியது

  • டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) திருத்த மசோதா 2026 கடும் அமளிக்கு பிறகு இன்று நிறைவேறியது. இந்த மசோதா சட்டமான பிறகு வினாத்தாள் கசிவில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்ப வாய்ப்புள்ளது.

    Advertisement

    'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய தொடர் போராட்டத்தை தொடர்ந்து தான் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.

    Advertisement

    இந்த போராட்டத்தின்போது வினாத்தாள் கசிவுக்கு எதிராக மத்திய அரசு விரைவு நீதிமன்றம் அமைப்பதாகவும், தண்டனையை அதிகப்படுத்துவதாகவும் கூறியது. இதனை செயல்பாட்டுக்கும் கொண்டு வரும் வகையில் பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) திருத்த மசோதா 2026 தயாரிக்கப்பட்டது.

    இந்த மசோதா நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது நேற்று விவாதம் தொடங்கியது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் விவாதத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சமாஜ்வாதி சார்பில் அகிலேஷ் யாதவ், திமுக சார்பில் தயாநிதி மாறன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இந்த விவாதத்தில் பங்கேற்று தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

    Advertisement

    அதன்பிறகு இந்த மசோதா மீதான இன்று முடிவடைந்தது. இதையடுத்து குரல் வாக்கெடுப்பை நடத்தினார் சபாநாயகர் ஓம்பிர்லா. குரல் வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவு கிடைத்தது. இதையடுத்து இந்த மசோதா நிறைவேறியது. இனி இந்த மசோதா நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அதன்பிறகு ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஒப்புதல் கிடைத்த பிறகு இது சட்டமாகும். இந்த மசோதா சட்டமாகும்போது வினாத்தாள் கசியவிடும் தனி நபர்களுக்கான தண்டனை தற்போது (5 ஆண்டு சிறை + ரூ.10 லட்சம் அபராதம்)இருப்பதை விட அதிகமாக வழங்கப்படும்

    அதன்படி வினாத்தாள் கசிவில் தொடர்புடைய தனி நபர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை + ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். அதேபோல் திட்டமிட்டு தொடர்ந்து வினாத்தாள் கசிவில் ஈடுபடும் கும்பல்களுக்கு (Organised Paper Lead Syndicates) ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க மசோதா இடம் அளிக்கிறது.

    Advertisement

    முன்னதாக இந்த மசோதா மீதான விவாதத்தின்போது கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசும்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் மீதான தாக்குதலை கண்டித்தவர்கள், அவர்களின் போராட்டத்தால் தான் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இன்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவில் தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது தடியடி உள்ளிட்ட அடக்குமுறைகள் நடந்தன. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த வன்முறையை கட்டவிழ்த்து விட மத்திய உள்துறை அமைச்சர் அல்லது பிரதமரால் மட்டுமே முடியும் என்று கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    Advertisement

    இதற்கு ஆளும் கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்சபாவில் கடும் அமளி நடந்தது. ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறினர். இதையடுத்து லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலையீடு செய்து ஆதாரத்துடன் தான் பேச வேண்டும் என்று கூறி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார். அதன்பிறகு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ''ராகுல் காந்தியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. அவர் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். துப்பாக்கிச்சூடு எதுவும் நடத்தப்படவில்லை'' என்று விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Anti Paper Leak Bill Passed in Lok Sabha: The Public Examinations ( Prevention of Unfair Means) Amendment Bill, 2026, was passed in the Lok Sabha today following a massive uproar. Once this bill becomes law, individuals involved in question paper leaks could face up to 10 years in prison and a fine of up to Rs.1 crore.