டெல்லி: மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே எத்தனால் கலப்பு பெட்ரோலை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இப்போது நாடு முழுக்க 20% எத்தனால் கலப்பு பெட்ரோல் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த எத்தனால் கலப்பு பழைய வாகனங்களைப் பாதிப்பதாக தொடர்ந்து புகார் உள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நமது நாட்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி தான் பெரிய செலவாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில், இதனால் இந்தியாவின் அந்நிய செலாவணியில் பெரிய தாக்கம் ஏற்படுகிறது. இதற்கிடையே கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, சுற்றுச்சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தற்போது E20 (20% எத்தனால் + 80% பெட்ரோல்) எரிபொருள் நாடு முழுவதும் விற்கப்பட்டு வருகிறது. இப்போது விற்பனையில் உள்ள வாகனங்களுக்கு E20 பெட்ரோல் போட்டாலும் எந்தவொரு சிக்கலும் வராது. ஆனால், பழைய வாகனங்களில் E20 பயன்படுத்துவது குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில், இப்போது இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. ARAI எனப்படும் ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில், E10 பெட்ரோலுக்காக வடிவமைக்கப்பட்ட பழைய வாகனங்களில் E20 பயன்படுத்தும்போது சில ரப்பர் பாகங்கள் சேதமடைய வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முழு ரிப்போர்ட் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் அந்த ரிப்போர்ட்டில் உள்ள சில தகவல்கள் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. அதன்படி எரிபொருள் குழாய்கள், கேஸ்கெட்டுகள், சீல்கள், ஓ ரிங்க் போன்ற ரப்பர் பொருட்கள் E20 பயன்பாட்டால் சீக்கிரமே தேய்மானம் அடைவது தெரிய வந்துள்ளது. இதனால் ரப்பர் பொருட்களை மாற்ற வேண்டிய நிலையும் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் வாகனங்களில் இருக்கும் உலோக பாகங்களில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதையும் அந்த ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது. இது தவிர என்ஜின் நீடித்த செயல்திறன் தொடர்பாக இரண்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் சோதனை மேற்கொண்டன. அதில் ஒரு நிறுவனம் 400 மணி நேர சோதனைக்குப் பிறகும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தது. ஆனால் BS-VI டர்போ என்ஜின் கொண்ட மற்றொரு வாகனத்தில் மொத்தம் 809 மணி நேர சோதனை நடத்தப்பட்டது. அதில் Exhaust Valveல் வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாகக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்றும் சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, மூன்று நிறுவனங்கள் தனித்தனியாக சோதனை நடத்தின. அதில் பெரிய அளவிலான தொழில்நுட்ப கோளாறுகள் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், BS-IV இருசக்கர வாகனங்களில் ஸ்டார்ட் செய்யும்போது சில வேறுபாடுகள் காணப்பட்டதாக ஆய்வு குறிப்பிடுகிறது. E20 பயன்படுத்தும்போது மைலேஜ் 2 முதல் 6 சதவீதம் வரை குறையக்கூடும் என்றும் சில வாகனங்களில் அதிக தூரம் ஓடிய பிறகு மாசு ஏற்படுத்துவது சற்று அதிகரித்ததாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மற்றபடி அதில் எந்தவொரு சிக்கலும் ஏற்படவில்லையாம். 2023க்கு முன்பு தயாரிக்கப்பட்ட பெரும்பாலான வாகனங்கள் E10 எரிபொருளுக்கே வடிவமைக்கப்பட்டவை. இந்திய சாலைகளில் ஓடும் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்கள் E20க்கு முழுமையாக பொருந்தாதவை என அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஒரு விஷயத்திற்காகவே பல பழைய வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். E20 பயன்பாட்டால் மைலேஜ் குறைவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டி டெல்லி ஜந்தர் மந்தரில் சமீபத்தில் போராட்டமும் நடத்தினர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது. E20 விவகாரமே முழுமையாக ஓயாத நிலையிலும், E25 (25% எத்தனால்) எரிபொருளின் தாக்கம் குறித்து E10 மற்றும் E20 வாகனங்களில் புதிய ஆய்வை மேற்கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் மைலேஜ், என்ஜின் செயல்திறன் மற்றும் பராமரிப்பு செலவு உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்.. E20 பெட்ரோல் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கும், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் உதவுகிறது. அதேநேரம் பழைய வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் எரிபொருள் குழாய்கள் உள்ளிட்ட ரப்பர் பாகங்களைத் தொடர்ந்து பரிசோதித்து, தேவையான பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.E20 எரிபொருள்
தேய்மானம்
டூவீலர்
E25 எரிபொருள்