லட்டு மாதிரி சான்ஸ்.. 10,000 ஆகப் போகுது பென்சன்! மத்திய அரசின் கையில் சூப்பர் ப்ளான்.. முழு விபரம்!

  • டெல்லி: மத்திய அரசின் முக்கிய சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றான அடல் ஓய்வூதிய திட்டம் குறித்து தற்போது புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    இதுவரை அமைப்புசாரா தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், தினக்கூலி தொழிலாளர்கள், தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உள்ளிட்டோருக்கு ஓய்வுக்கால பாதுகாப்பாக இருந்து வரும் இந்த திட்டம், இனி மேலும் விரிவுபடுத்தப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

    Advertisement

    தற்போது அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஒருவர் 60 வயதை அடைந்த பிறகு மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெற முடிகிறது. இதில் எவ்வளவு ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதனை பொறுத்து, அவர்கள் மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகையும் மாறுபடும்.

    இந்த திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் எஸ்.ராமன், அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதிய தொகையை உயர்த்துவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கம், மருத்துவ செலவுகள், வாழ்க்கைச் செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஓய்வூதிய உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.

    Advertisement

    இதனால், மாதம் ரூ.10 ஆயிரம் வரை ஓய்வூதியம் வழங்கும் வகையில் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியுமா என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், பல்வேறு தரப்பிலிருந்தும் வந்துள்ள கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அடல் ஓய்வூதிய திட்டம் என்பது நீண்டகால சமூக பாதுகாப்பு திட்டம் என்பதால், இதில் மாற்றம் செய்வது சாதாரண விஷயம் அல்ல என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஏனெனில், ஓய்வூதியம் உயர்த்தப்பட்டால், அதற்கான நிதி பொறுப்பும் மத்திய அரசுக்கு அதிகரிக்கும். அதனால், நிதி நிலை, எதிர்கால செலவுகள், சந்தாதாரர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல அம்சங்களை ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    Advertisement

    இந்த திட்டத்தில் தற்போது சேருபவர்கள் 60 வயது வரை மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். பின்னர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற முடியும். ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பிறகு, அவருடைய துணைக்கும் அந்த தொகை வழங்கப்படும். 18 வயதிலேயே இந்த திட்டத்தில் சேருபவர்கள் மிகவும் குறைந்த தொகை செலுத்தினாலே போதும். உதாரணமாக, 18 வயதில் திட்டத்தில் சேர்ந்து மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் பெற விரும்பினால், மாதத்திற்கு சுமார் ரூ.210 அளவில் மட்டுமே செலுத்த வேண்டும்.

    அதேபோல், 30 வயதில் சேருபவர்கள் மாதம் ரூ.577 வரை செலுத்த வேண்டும். 40 வயதில் திட்டத்தில் சேர்ந்தால் மாதம் ரூ.1,454 வரை செலுத்த வேண்டியிருக்கும். இதனால் இளைஞர்கள் அதிக அளவில் இந்த திட்டத்தில் சேர ஆரம்பித்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சாதனை அளவில் 1 கோடியே 35 லட்சம் பேர் புதியதாக இந்த திட்டத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 9 கோடியை நெருங்கியுள்ளது.

    Advertisement

    இதே வேகத்தில் புதியவர்கள் இணைந்தால், அடுத்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 10 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே இந்த திட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எதிர்கால நிதி பாதுகாப்பு குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருவது இதன் மூலம் தெரிகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடல் ஓய்வூதிய திட்டத்தில் சேர விரும்புபவர்கள், தங்களது வங்கிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். வங்கிக் கணக்கு, ஆதார், செல்பேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இருந்தால் போதும். வங்கியில் கேஒய்சி நடைமுறை முடிக்கப்பட்ட பிறகு, மாதந்தோறும் உங்கள் கணக்கிலிருந்து தானாகவே பணம் பிடித்தம் செய்யப்படும். அதன் பிறகு திட்டத்தில் நீங்கள் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுவீர்கள். இதனால், எதிர்கால ஓய்வூதிய பாதுகாப்பு தேடும் பொதுமக்களுக்கு, அடல் ஓய்வூதிய திட்டம் தற்போது முக்கிய சேமிப்பு திட்டமாக மாறி வருகிறது. குறிப்பாக, ஓய்வூதிய வரம்பு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டால், இந்த திட்டத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Centre reportedly plans to raise Atal Pension Scheme limit from ₹5,000 to ₹10,000 per month.