ஆர்ஜேடி வேட்பாளரின் டெபாசிட் காலி.. பீகாரில் பிரசாந்த் கிஷோர் அடித்த எச்சரிக்கை மணி!

  • டெல்லி: பீகார், மத்திய பிரதேசம்., குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பீகாரில் ஜன் சுராஜ் கட்சியும், ம.பியில் காங்கிரஸும், குஜராத்தில் பாஜகவும் வென்றுள்ளன. பீகார் பாங்கிபூர் தொகுதியில் பிரசாந்த் கிஷோரின் வெற்றி ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுக்கு எச்சரிக்கை மணியாக ஒலித்துள்ளது.

    Advertisement

    பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினின் ராஜினாமாவைத் தொடர்ந்து பீகாரின் பாங்கிபூர் சட்டமன்ற தொகுதி காலியானது. மத்தியப் பிரதேசத்தில், ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ததியா தொகுதி காலியானது. குஜராத்தில், யோகேஷ்பாய் நரந்தாஸ் படேலின் மரணத்தால் மஞ்சள்பூர் காலியானது.

    Advertisement

    3 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்

    இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஜூலை 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் பீகாரில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும், குஜராத்தில் பாஜகவும், ம.பி.யில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.

    பிரசாந்த் கிஷோர் வெற்றி

    பீகார் பாங்கிபூரில் பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரை 19 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் பிரசாந்த் கிஷோர். இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் பாங்கிபூர் தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வந்தது. இந்த இடைத்தேர்தலில் அந்தக் கோட்டையைத் தகர்த்து, பாங்கீபூரை தனதாக்கியுள்ளது ஜன் சுராஜ் கட்சி.

    Advertisement

    நீண்ட காலமாக பாஜகவின் கோட்டையாகக் கருதப்பட்ட தொகுதியில், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தொடர்ச்சியாக 4 முறை வென்ற தொகுதியில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தொடர்ந்து முன்னிலையில் இருந்ததன் மூலம், ஜன் சுராஜை இனி வெறும் மக்கள் பிரச்சாரமாக ஒதுக்கிவிட முடியாது என்பதை பிரசாந்த் கிஷோர் நிரூபித்துள்ளார்.

    ஆர்ஜேடிக்கு படுதோல்வி

    கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் பொதுத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் வென்றதன் மூலம் அவர் முதல்முறையாக பீகார் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார்.

    Advertisement

    பாங்கிபூர் தொகுதியில் ஆர்ஜேடி கட்சி 3வது இடம் பிடித்துள்ளது. பாஜகவுக்கு பிரதான எதிர்க்கட்சியாக களத்தில் இருக்கும் ஆர்ஜேடி, டெபாசிட் இழந்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுக்கு பீகாரில் ஒரு ஆசிட் டெஸ்ட்டாக பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் இடம்

    குஜராத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் என இருதரப்பு மட்டுமே போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிக்காபாய் ரபாரியை 30,630 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சதேந்திர பாய் படேல் தோற்கடித்துள்ளார். அங்கு பாஜக vs காங்கிரஸ் என இருவர் மட்டுமே போட்டியிட்ட நிலையில், 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது காங்கிரஸ்.

    Advertisement

    மத்திய பிரதேசத்தில் 6,016 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக வேட்பாளர் அஷுதோஷ் திவாரியை தோற்கடித்துள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங். ஏற்கனவே அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த நிலையில், இடைத்தேர்தலில் வென்று தொகுதியை தக்க வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.

    ஆர்ஜேடி, காங்கிரஸுக்கு பின்னடைவு

    பீகாரில் பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலை ஆர்ஜேடிக்கு சாதகமாக வலுப்பெறவில்லை. மாறாக, ஒரு மாற்று சக்தியைத் தேடும் வாக்காளர்களை பிரசாந்த் கிஷோர் ஈர்த்தார். ஜன் சுராஜ் கட்சியோடு ஒப்பிடுகையில் ஆர்ஜேடியின் பிரச்சாரம் வேகமெடுக்கவில்லை. பிரசாந்த் கிஷோர் ஆளும் கூட்டணிக்கு மிகவும் வெளிப்படையான சவாலாக உருவெடுத்தார்.

    Advertisement

    காங்கிரஸும் இந்தப் போட்டியில் ஒதுங்கியே இருந்தது. ஆர்ஜேடிக்கு பலமாகத் திகழும் யாதவ் - முஸ்லீம் வாக்குகளும் இந்த முறை விழவில்லை. இதன் காரணமாக டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது ஆர்ஜேடி.

    ஆர்ஜேடிக்கு எச்சரிக்கை மணி

    பல ஆண்டுகளாக பீகாரின் அரசியலை வடிவமைத்து வந்த வழக்கமான என்டிஏ - ஆர்ஜேடி மோதலைப் போலல்லாமல், பாங்கிபூர் தொகுதியானது பாஜக மற்றும் ஜன் சுராஜ் இடையேயான இருமுனைப் போட்டியாகவே காட்சியளித்தது.

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைப் பொறுத்தவரை, அரசின் மீதான பொதுமக்களின் அதிருப்தி இனி தானாகவே பிரதான எதிர்க்கட்சிக்கான ஆதரவாக மாறாது என்பதுதான் முக்கியமான விஷயம். இது பீகாரில் ஆர்ஜேடிக்கு எச்சரிக்கை மணி.

    English Summary

    JSP Prashant Kishor's victory in Bihar's Bankipur constituency has served as a wake-up call for the RJD and Congress parties.